Published : 14 Dec 2020 11:22 AM
Last Updated : 14 Dec 2020 11:22 AM
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வைரக் கம்மலைத் தொலைத்துவிட்டதாகவும் அதைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்றும் நடிகை ஜூஹி சாவ்லா பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஜூஹி சாவ்லா 'தயவுசெய்து உதவுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதோடு தனது இன்னொரு வைரக் கம்மலின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்த சாவ்லா, "இன்று காலை, மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் 8-வது கேட்டை நோக்கி எனது பெட்டிகளை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று கொண்டிருந்தேன். எமிரேட்ஸ் கவுன்ட்டரில் செக் செய்துவிட்டு, இம்மிக்ரேஷனில் பாதுகாப்புச் சோதனை செய்தேன். இதற்கு நடுவில் எனது வைரக் கம்மல் எங்கோ தவறி விழுந்துள்ளது. அதைக் கண்டுபிடிக்க யாராவது எனக்கு உதவினால் நன்றாக இருக்கும்.
கிடைத்தால் காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உங்களுக்குச் சன்மானம் கொடுத்து மகிழ்வேன். இந்தப் புகைப்படத்தில் இருப்பதுதான் அந்த வைரக் கம்மல் ஜோடியில் இன்னொரு கம்மல். கடந்த 15 வருடங்களாகக் கிட்டத்தட்ட தினமும் இதை நான் அணிந்திருக்கிறேன். தயவுசெய்து இதைக் கண்டுபிடிக்க உதவுங்கள். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கை கூப்புவது போன்ற எமோஜியோடு இந்தப் பதிவை சாவ்லா பகிர்ந்துள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றில் நடித்திருந்த சாவ்லா, அதன் பிறகு எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியை சாவ்லாவும், அவர் கணவர் ஜெய் மேத்தாவும், நடிகர் ஷாரூக் கானும் தான் இணைந்து வாங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT