Published : 12 Dec 2020 07:08 PM
Last Updated : 12 Dec 2020 07:08 PM
இதுபோன்ற ஒரு படத்துக்கு என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்பது எனக்குத் தெரியும் என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகவுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகப்பட்ட கதைகளாகும்.
இதில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வான் மகள்'. அவரும், சிம்ரனும் நடித்துள்ள இந்தப் படம் தொடர்பாக கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:
"மற்ற மூவரும் அவரவர் படங்களை முடித்த பிறகுதான் நான் 'வான் மகள்' படத்தை மிகுந்த தயக்கத்துடன் எழுதினேன். எழுத, இயக்க, எடிட் செய்து, பார்க்க என அனைத்துக் கட்டத்திலும் மிகக் கடினமான படமாக இருந்தது. கவுரவம், காதல் பாவம் எனப் படத்தின் வகை அப்படி. இதுபோன்ற ஒரு படத்துக்கு என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்பது எனக்குத் தெரியும்.
ஏன் இப்படி இந்த விஷயத்தைக் காட்டினீர்கள் என்று மக்கள் கேட்பார்கள். முதலில் வெற்றிமாறன் கதையிலிருந்து ஒரு விஷயத்தை எடுத்துச் செய்யலாமா என்று பல முறை யோசித்து பிறகு தனியாக ஒரு புதிய கதையை எழுதினேன். இந்தப் படத்துக்கான ஆய்வில் இருக்கும்போது கேள்விப்பட்ட ஒரு சம்பவம்தான் இந்தப் படத்துக்கான அடிப்படை".
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT