Published : 10 Dec 2020 12:52 PM
Last Updated : 10 Dec 2020 12:52 PM
சிவாஜி மீதான விமர்சனம் தொடர்பாக, அரசியல் விமர்சகர்களுக்கு நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. ரஜினியும் தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார்.
ரஜினி அரசியல் குறித்துப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியலில் ரஜினி சிவாஜியாக இருப்பார் என்று தெரிவித்தனர். இது சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் நாசர் கூறியிருப்பதாவது:
"சிவாஜி ஐயா இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம். பாடிக் கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும், திரை நடிப்புக் கலையிலும் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரலைக் கேட்டதில்லை.
சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று. சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய்ப் பயன்படுத்தியது அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேர்தல் காலமது நெருங்கி வருகின்ற இந்த வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியலில் களமிறங்குகிறார்கள். சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தரமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெருந்தலைவர்களோடு பழகியும், புரிந்தும் வந்தவர். அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார். இனியும் அவர் பெயரைக் கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டும்".
இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT