Published : 04 Dec 2020 05:56 PM
Last Updated : 04 Dec 2020 05:56 PM
‘சபரிமலைக்கு செல்லும் போது, அங்கே கிரேஸி மோகன் காரமாக இருக்கிறது. எல்லாவற்றிலும் ஸ்வீட் இருக்கட்டும் என்று சொன்னான். பார்த்தால், வத்தக்குழம்பு கூட தித்திப்பாக இருந்தது. யாராலும் சாப்பிடவே முடியவில்லை. மோகன் மட்டும் திருப்தியாக சாப்பிட்டான்’ என்று சபரிமலைக்கு சென்ற அனுபவத்தை மாது பாலாஜி பகிர்ந்து கொண்டார்.
கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சபரிமலைக்குச் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
’’சுவாமியே சரணம் ஐயப்பா. இது கார்த்திகை மாதம். மாலையணிந்து, ஒரு மண்டலகாலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் காலம் இது. ’வாழும் காலம் எல்லாம் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா’, ‘ஆறுவாரமும் நோன்பிருந்து ஐந்து மலைகளையும் கடந்து ஆர்வமுடன் இருமுடியினை தலை மகுடமிட்டுச் சுமந்து வந்து, ஏறினேன் பதினெட்டுப் படிகள், இதயமெல்லாம் மலர்ச்சரங்கள்’. இந்தப் பாடல் வ.வே.சு. ஐயர் எழுதிய பாடல். இந்தப் பாடல்தான் நான் சபரிமலைக்குச் செல்வதற்குக் காரணமாக அமைந்தது. அதற்காக என்றென்றும் அவருக்கு என் நன்றியைச் சொல்லுவேன்.
86வது வருடத்திலிருந்து எங்க குரூப்பில் எல்லோரும் சபரிமலைக்குப் போகத் தொடங்கினோம். குரூப் என்றால், எங்கள் கணேஷ் குருசாமி குரூப். இதில் கிரேஸி கிரியேஷன்ஸுக்கும் ஒரு பங்கு உண்டு. ஒரு சிலர், இதை கிரேஸி கிரியேஷன்ஸ் குரூப் என்றும் சொல்லுவார்கள்.
நான் சபரிமலைக்குப் போக ஆரம்பித்தது 87ம் வருடம். முதல் தடவை, எங்கள் குருசாமியுடன் சபரிமலைக்குப் பயணமானேன். முதல் தடவை மாலை போட்டிருக்கிறேன். கன்னி ஐயப்பன். ரொம்ப பயம். நிறையக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள். எங்கள் குருசாமி சொன்னார். அவற்றையெல்லாம் கடைப்பிடித்து, 48 நாள் விரதமிருந்து, சபரிமலை யாத்திரைக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
எங்கள் குருசாமியைப் பற்றிச் சொல்லவேண்டும். எங்கள் ட்ரூப்பில் சுப்ரமணியன் என்றொருவர் இருக்கிறார். சுப்பு என்று கூப்பிடுவோம். நிறைய ரோல் பண்ணியிருக்கிறார். சுப்புவின் மாமாதான் குருசாமி. மாமாதான் என்றாலும் சுப்புவை விட இரண்டு வயது கம்மி அவருக்கு. அவர்தான் எங்களுக்கு குருசாமி. 25 வயதுதான் என்றாலும் அவருக்கு 50 வயதுக்கு உரிய மெச்சூரிட்டி இருந்தது. தவிர, பகவான் மீது அப்படியொரு ஈடுபாடு. டோட்டல் சரண்டர். இன்று வரைக்கும் அவரிடம் பார்க்கிறேன்.
மற்ற கோயில்களுக்கெல்லாம் குருசாமி இல்லாமல் போகலாம். ஆனால் சபரிமலைக்கு மட்டும் குருசாமியுடன் தான் போகவேண்டும் என்பதுதான் ஒரு விசேஷம். அதனால்தான் ஐயப்பனை, குருவின் குருவே என்கிறோம். அந்த வகையில் எங்களுக்கு நல்ல குருசாமி கிடைத்தது எங்களுகு பாக்கியம்தான்.
87ம் வருஷம். முதல் முறை... கன்னிச்சாமி. ஒரு கையில் இருமுடியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் குருசாமியின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தேன். முதல் முறை செல்லும்போது, குருசாமி போல் இருப்பவர்தான் ரெஸ்ட் எடுக்கும் தருணத்தில் இருமுடியை எடுத்து கீழே வைப்பார். ’பகவானே பகவதியே... என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ‘ஈஸ்வரனே’ என்பதற்குப் பதிலாக ‘ஈசனே’ என்றார். உடனே நான்’ஈஸியே’ என்று சொல்லிவிட்டேன். ‘மலையை ஈஸியாக ஏறவேண்டும் என்றுதான் உன்னை அப்படிச்சொல்லச் சொல்லியிருக்கிறார்’ என்று குருசாமி சொன்னார்.
மலை போய்க்கொண்டே இருக்கும். உண்மையிலேயே, ஐயப்பனின் அருள் இருந்தால்தான் ஏறமுடியும். நாம் ஏறினோம் என்றே சொல்லமுடியாது. அந்த ஐயப்பன் தான் நம்மை ஏற்றிவிடுகிறார். அங்கே போய் தரிசனம், அபிஷேகம் எல்லாம் முடிந்தது.
எங்கள் குருசாமிக்கு 25 வயசு. எனக்கு முப்பது வயசு. அப்போதே எனக்கு லேசாக இளநரையெல்லாம் வந்துவிட்டது. அதனால் என்னை குருசாமி என்று நினைத்துக் கொண்ட காமெடியெல்லாம் நடந்தது.
மலையின் ஒவ்வொரு இடத்தையும் குருசாமி விளக்குவார். அவ்வளவு அழகாக இருக்கும். அப்போது மாலையில் படி பூஜை நடந்துகொண்டிருந்தது. அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள். யாராவது ஒருவர் உபயம் செய்வார்கள். படி பூஜை நடக்கும் என்றார் குருசாமி. அப்படி உபயம் செய்கிற குரூப்பின் குருசாமி, இன்னொரு முறை படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். இருமுடி இல்லாமலேயே தரிசிக்கலாம் என்றார். ‘நாமளும் இப்படி படிபூஜை பண்ணலாம்’ என்றேன்.
விசாரித்ததில் ஐயாயிரம் கட்டவேண்டும் என்றார்கள். ‘பதினெட்டு பேர் போயிருக்கோம். ஆளுக்கு முந்நூறு ரூபா போட்டா கட்டிடலாமே’ என்றோம். பணம்தான் தெரிந்ததே தவிர, பக்தி தெரியவில்லை. ஒரு மமதை எட்டிப்பார்த்தது. பணம் கலெக்ட் பண்ணினோம். குருசாமியிடம் கொடுத்தோம். கட்டினார். 89ம் வருஷம் படிபூஜை செய்யலாம் என்றார்கள்.
89ம் வருஷம். ரெண்டு டெம்போ டிராவலரில் போனோம். முப்பது முப்பத்தஞ்சு பேர் போனதாக ஞாபகம். அந்த முறை கிரேஸி மோகனும் எங்களுடன் சேர்ந்துகொண்டான். அதற்கு முன்பு எங்கள் சித்தப்பாவுடன் சேர்ந்து போனான். 21ம் தேதி படிபூஜை. மோகன், சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டு செல்லலாமே என்றான். குருசாமியும் சரியென்றார்.
சபரிமலை போய்விட்டோம். பதினெட்டாம்படி. சுவாமி தரிசனம். எல்லாம் முடிந்தது. காலையில் பொங்கல், கேசரி, கொத்ஸு உணவு. இதில் கொத்ஸு காரமாக இருந்தது. அதனால் சமையற்காரரிடம், ‘மத்தியானம் கொஞ்சம் ஸ்வீட்டை சேருங்க’ என்று சொல்லிவிட்டான். வத்தக்குழம்புலேருந்து எல்லாவற்றிலும் இனிப்பைப் போட்டுவிட்டார் சமையற்காரர். வத்தக்குழம்பு பாயசம் மாதிரி இருந்தது. யாராலும் சாப்பிடமுடியவில்லை. எல்லோருக்கும் திகட்டுகிறது. கிரேஸி மோகன் மட்டும் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ’அடுத்த முறை சபரிமலைக்கு வரும்போது, வெல்லமும் சர்க்கரையும் எடுத்துக் கொண்டு வரவே கூடாது’ என்று சட்டம் போடுகிற அளவுக்கு இனிப்பு.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.’’
இவ்வாறு மாது பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT