Published : 03 Dec 2020 04:28 PM
Last Updated : 03 Dec 2020 04:28 PM
திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் போது அதற்கான மதிப்பீடில் சற்று இரக்கம் காட்ட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜகன்னாத், ஒலிப்பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதில் திரைத்துறையில் தோல்விப் படங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது குறித்தும், அந்தப் படங்களுக்கு வரும் விமர்சனங்களால் துறை எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் பேசியிருந்தார்.
இந்தப் ஒலிப்பதிவை தற்போது வழிமொழிந்துள்ள தயாரிப்பாளர் சங்கம், பத்திரிகையாளர்கள் விமர்சனங்களில் இரக்கம் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
"200 படங்கள் வந்தால் அதில் 190 படங்கள் தோல்வியடைகின்றன. இவற்றை சரியாக எடை போட முடியாத பத்திரிகையாளர்கள் அவற்றுக்கு மதிப்பீடு (rating) என்ற பெயரில் அவர்கள் போக்கில் ஒன்றைத் தருகின்றனர். உண்மையில் இந்த 190 தோல்விப் படங்களால் தான் துறை நடக்கிறது. பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை நடக்கிறது.
ஆனால் தோல்விப் படத்துக்கு வரும் கடுமையான விமர்சனங்களால் இயக்குநர்கள் அழிந்து போகின்றனர், தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்துக்கு யாரும் தேதி கொடுக்க மாட்டார்கள். எனவே இனி கடுமையான விமர்சனம் எழுதுபவர்கள் ரேட்டிங் கொடுக்கும் போது ஒரு புள்ளிகளுக்கு பதிலாக இரண்டு கொடுங்கள், இரண்டு புள்ளிகள் என்றால் மூன்று கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் தான் படத்தின் தொலைக்காட்சி உரிமைத்தை விற்க முடியும்.
வெற்றிப் பட இயக்குநர், தயாரிப்பாளர்களை விட தோல்விப் பட இயக்குநர் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். வியாபார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் திரைப்படங்களே இயக்கக் கூடாது. ஆனால் திரைப்படங்கள் மீது தாகம் கொண்டவர்கள் மட்டுமே தயாரிக்க முன் வருகிறார்கள். யாருமே அவரது படம் தோல்வியடைய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். ஒரு தோல்விப் படத்துக்குப் பின் 10 வருட உழைப்பு இருக்கிறது. அந்தப் படத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.
பூரி ஜகன்னாத் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளை நாங்கள் வழிமொழிகிறோம். எனவே மேற்சொன்ன விஷயங்களை அனைத்து பத்திரிகையாளர்களும், சேனல்களும் கருத்திக் கொண்டு, தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்".
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT