Published : 02 Dec 2020 06:02 PM
Last Updated : 02 Dec 2020 06:02 PM
தனக்குக் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணிடமிருந்து பாதுகாப்பு கோரிய இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
சாரா சார் என்ற பெண்மணி தன்னைக் கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்வதாகவும், தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளதகாவும் ஸ்பீல்பெர்க் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பெண்மணி தன்னைக் கொலை செய்யத் துப்பாக்கி வாங்கியதாகவும் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல், பின் தொடர்தல், மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கடந்த காலத்தில் சாரா கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சாராவிடமிருந்து ஸ்பீல்பெர்க்குக்கு ட்விட்டரில் அனுப்பப்பட்ட செய்தியில், "என்ஐபி முகவரியைத் திருடியவர்களை நான் தனிப்பட்ட முறையில் சென்று கொல்ல வேண்டும் என்றால் அதைச் செய்வேன், புரிகிறதா" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்புக்கும், தனது மனைவி மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுவதாக ஸ்பீல்பெர்க் புகார் அளித்துள்ளார். இதனால் ஸ்பீல்பெர்க்குக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் அவரை நெருங்கக் கூடாது என சாராவுக்குத் தடையாணையைப் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து குறைந்தது 300 அடி தூரத்தில் சாரா இருந்தாக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT