Published : 02 Dec 2020 01:48 PM
Last Updated : 02 Dec 2020 01:48 PM

திருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்: எலியட் பேஜ் எனப் பெயர் மாற்றம்

பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை எல்லன் பேஜ். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் ‘ஜுனோ’,‘எக்ஸ் மென்’, ‘இன்செப்ஷன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எல்லன் பேஜ் என்ற தன் பெயரை எலியட் பேஜ் என்று மாற்றியுள்ளார். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நான் ஒரு திருநம்பி என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெயர் எலியட். இதை எழுதுவதும், இப்போது இந்த இடத்தில் இருப்பதும் என்னுடைய அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

இந்தப் பயணம் முழுக்க எனக்கு ஆதரவளித்த அற்புதமான மனிதர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தன்பாலினச் சமூகத்தில் ஏராளமான உள்ளங்களால் நான் ஊக்கம் பெற்று வருகிறேன். அன்பான மற்றும் சமமான ஒரு சமூகத்தை உருவாக்க என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆதரவையும், விடா முயற்சியையும் வழங்குவேன்.

நான் அமைதியையும் வேண்டுகிறேன். என்னுடைய மகிழ்ச்சி உண்மையானது. ஆனால், அது எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கிறது. அதீத மகிழ்ச்சி இருக்கும் அதேவேளையில் நான் சுமக்கும் இந்தச் சிறப்புரிமை எனக்கு பயத்தை தருகிறது. வெறுப்பு, கேலி, வன்முறை குறித்து எனக்கு பயம் ஏற்படுகிறது. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த மகிழ்ச்சியான தருணத்தை நான் மட்டுப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், நான் இதை விரிவாக விளக்க விரும்புகிறேன்.

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. எண்ணற்ற கொடூரமான வன்முறைகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் மட்டுமே ஏறக்குறைய 40க்கும் அதிகமான தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்கத் திருநங்கைகள் ஆவர்.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை குற்றமாக மாற்றி, எங்கள் இருப்புக்கான உரிமையை மறுப்பதற்காக அயராது உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கும், தன்பாலினச் சமூகத்தின் மீது தொடர்ந்து விரோதப் போக்கைத் தொடரும் அனைவருக்கும் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது. நீங்கள் கட்டவிழ்த்துவிடும் மோசமான மற்றும் இழிவான கோபம் தன்பாலினச் சமூகத்தின் தோள்களில் இறங்குகிறது. 40 சதவீதத் தன்பாலின இளைஞர்கள் தற்கொலைக்கு முயல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போதும். நீங்கள் மக்களைக் காயப்படுத்துகிறீர்கள். அவர்களில் நானும் ஒருவன். உங்கள் தாக்குதல்களை எதிர்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். நான் ஒரு திருநம்பியாக இருப்பதை விரும்புகிறேன். நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பதை விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் துன்புறுத்தல், வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அனைத்துத் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது: நான் உங்களை கவனிக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன். இந்த உலகத்தைச் சிறப்பாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்''.

இவ்வாறு எலியட் பேஜ் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர், விக்கிபீடியா உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் எல்லன் தன் பெயரை எலியட் பேஜ் என்று மாற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x