Published : 30 Nov 2020 01:07 PM
Last Updated : 30 Nov 2020 01:07 PM
மறைந்த இசையமைப்பாளர் வாஜித் கானின் மனைவி கமல்ருக் கான், தான் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகை கங்கணா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வாஜி கான் கடந்த ஜூன் 1ஆம் தேதி காலமானார். அவரது மனைவி கமல்ருக் கான் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கலப்புத் திருமணத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் என்ன என்பதையும், தன்னை மதம் மாற்ற வாஜித் கானின் குடும்பத்தினர் எப்படியெல்லாம் அச்சுறுத்தினர் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இதனால் தனக்கும் தனது கணவருக்குமான பந்தத்திலும் பெரிய பாதிப்பு இருந்ததாக கமல்ருக் குறிப்பிட்டுள்ளார்.
"எனது குழந்தைகளின் உரிமைகளுக்காகவும், வாஜித் கானின் குடும்பத்தினர் அபகரித்துள்ள, என் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய சொத்துக்காகவும் நான் போராடி நிற்கிறேன். இதெல்லாமே நான் இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை என்பதால் என் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக நடக்கிறது.
எவ்வளவு ஆழமான வெறுப்பென்றால், அன்பார்ந்த ஒருவரின் மரணம் கூட அதை மாற்றவில்லை. இந்த மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் என்னைப் போன்ற, கலப்புத் திருமணங்களில் மதம் என்கிற நச்சுக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள் போராட்டத்துக்கு உதவியாய் இருக்கும்" என்று கமல்ருக் பதிவிட்டுள்ளார்.
வாஜித் கானின் மறைவுக்குப் பிறகும் போராடி வரும் கமல்ருக் கானுக்கு நடிகை கங்கணா ரணவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
"இந்த தேசத்தின் நேர்மையான சிறுபான்மையினர் பார்சி மக்கள். அவர்கள் இங்கு படையெடுக்க வரவில்லை. வாழ்க்கையைத் தேடி வந்தவர்கள். இந்தியத் தாயின் அன்பை மென்மையாகக் கோரியவர்கள். இந்த தேசத்தின் அழகுக்கும், பொருளாதாரத்துக்கும் அவர்களது சிறிய மக்கள்தொகை பெரிய அளவில் பங்காற்றியுள்ளது.
இவர் மறைந்த எனது நண்பரின் மனைவி. ஒரு பார்சி இனப் பெண். அவரது குடும்பத்தால் மதம் மாற வேண்டும் என்று துன்புறுத்தப்படுகிறார். எந்தத் தவறையும் செய்யாத ஒரு சிறுபான்மை இனத்தை நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்க விரும்புகிறேன். பார்சி இன மக்களின் விகிதம் அதிர்ச்சிகரமான அளவில் குறைந்து வருகிறது.
இது இந்தியா என்கிற தாயின் குணத்தையே காட்டுகிறது. அதிக அட்டகாசம் செய்யும் குழந்தைக்கே நியாயமின்றி அதிக கவனமும், சாதகங்களும் கிடைக்கும். மதிப்புமிக்க, உணர்ச்சிமிக்க, அன்பான, அனைத்துக்கும் உரிய குழந்தைக்கு எதுவும் கிடைப்பதில்லை. நாம் இதுகுறித்து ஆழமாக யோசிக்க வேண்டும்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.
இதோடு மதமாற்றத் தடை சட்டம் என்கிற ஹேஷ்டேகையும் கங்கணா குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT