Published : 26 Nov 2020 07:47 PM
Last Updated : 26 Nov 2020 07:47 PM
'பாலிவுட் வைவ்ஸ்' (Bollywood Wives) என்கிற தலைப்பைச் சுற்றி நடந்து வரும் சர்ச்சையில், இயக்குநர் மதுர் பண்டார்கருக்குத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் பதில் அளித்துள்ளார்.
'ஃபேஷன்', 'ஹீரோயின்', 'கேலண்டர் கேர்ள்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் மதுர் பண்டார்கர். இவர் 'பாலிவுட் வைவ்ஸ்' என்கிற தலைப்பைத் தனது அடுத்த படத்துக்காக அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளார். ஆனால், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உருவாகியிருக்கும் நிகழ்ச்சிக்கு இதே பெயரை கரண் ஜோஹர் வைத்துள்ளார்.
இது தொடர்பாகக் கடந்த வாரமே மதுர் பண்டார்கர், கரண் ஜோஹரைச் சாடிப் பதிவிட்டிருந்தார். இந்தத் தலைப்பை கரண் ஜோஹர் தன்னிடம் கேட்டதாகவும், தானும், தயாரிப்பாளர் சங்கமும் ஏற்கெனவே அதை மறுத்துவிட்டதாகவும், எனவே இந்தத் தலைப்பை லேசாக மாற்றிப் பயன்படுத்துவதெல்லாம் தொழில் ரீதியாகவும், நெறிமுறை அடிப்படையிலும் தவறு என்று பண்டார்கர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம், மேற்கிந்தியத் திரை ஊழியர்கள் கூட்டமைப்பு எனப் பல அமைப்புகள் மூலமாக முறையாக நோட்டீஸும் அனுப்பியுள்ளார். ஆனால், கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் இதற்குப் பதிலளிக்கவில்லை.
நாளை (வெள்ளிக்கிழமை 27 நவம்பர்) இந்த நிகழ்ச்சி வெளியாகவிருக்கும் நிலையில் கரண் ஜோஹர், பண்டார்கருக்குக் கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
"நமக்குள் நீண்ட காலமாக நட்பு இருந்து வருகிறது. பல வருடங்களாக இந்தத் துறையில் இருவரும் இருந்து வருகிறோம். உங்கள் படைப்புகளின் தீவிரமான ரசிகன் நான். என்றுமே உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என விரும்பியிருக்கிறேன்.
நீங்கள் எங்கள் மீது வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உருவாக்கியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரம் நாங்கள் புதிதாக, வித்தியாசமான ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இது உண்மை மனிதர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதால் 'தி ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்' (The Fabulous Lives of Bollywood Wives) என்கிற தலைப்பைத் தெர்ந்தெடுத்திருக்கிறோம். எங்கள் தலைப்பு தனித்துவமாக இருப்பதால், இதற்கு முன் இந்தத் தலைப்பால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த வருத்தம் இப்போது இருக்காது என நினைக்கிறேன்.
மேலும், எங்கள் சீரிஸை 'ஃபேபுலஸ் லைவ்ஸ்' என்கிற ஹேஷ்டேகின் கீழ்தான் அனைத்து சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறோம். இந்தப் பெயரை வைத்துதான் இந்தத் தொடர் வரிசையை உருவாக்கவிருக்கிறோம். எங்கள் சீரிஸின் தன்மை, ரசிகர்கள் என அனைத்தும் வித்தியாசமானவை. அது உங்களது படைப்புக்கு இடையூறாக இருக்காது என்று உறுதியுடன் கூறுகிறோம்.
நாம் இந்தப் பிரச்சினையைக் கடந்து வந்து ரசிகர்களுக்காகத் தொடர்ந்து சிறப்பான படைப்புகளைத் தருவோம் என்று நம்புகிறேன். உங்கள் அத்தனை முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகள். உங்கள் படைப்பைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று கரண் ஜோஹர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தப் புதிய தலைப்பைச் சுட்டிக்காட்டியும் மதுர் பண்டார்கர் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் இதற்கு மதுர் பண்டார்கர் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை.
ஆனால், இந்தத் தலைப்பை மாற்றிப் பயன்படுத்தினாலும் அது விதிமுறை மீறல் என்றும், அப்படி நடக்கும் பட்சத்தில் தர்மா ப்ரொடக்ஷன்ஸின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கிந்தியத் திரை ஊழியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT