Published : 25 Nov 2020 01:18 PM
Last Updated : 25 Nov 2020 01:18 PM
சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கும் கோச், ஆத்மாவை விரட்டப் போய் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி, நோயாளியால் சுடப்பட்டு குரலை இழந்த மனநல நிபுணர் என்ற மூன்று கதாபாத்திரங்களின் இருள் மிகுந்த வாழ்க்கையைப் பேசும் படமே 'அந்தகாரம்'.
கிரிக்கெட் கோச் வினோத் (அர்ஜுன் தாஸ்), அண்ணா நகரில் தன் நண்பன் பிரதீப்புடன் வசிக்கிறார். நண்பனின் பிறந்த நாளுக்காக ஒரு புத்தகத்தைப் பரிசளிக்கிறார். இதனால் இயல்பாக இருந்த நண்பனுக்குள் இன்னொரு ஆத்மா புகுந்துவிடுகிறது. அவர் மாற்றுத்திறனாளியாகவும், மனநிலை சரியில்லாதவராகவும் முடங்கிக் கிடக்கிறார். இந்நிலையில் வினோத் தன் லேண்ட்லைன் போன் வேலை செய்யவில்லை என்று புகார் தருகிறார். பிஎஸ்என்எல் அலுவலகம் அவருக்கு மாற்று லேண்ட்லைன் போன் தருகிறது. அந்த போன் வந்ததிலிருந்து ஏகப்பட்ட பிரச்சினைகள். தன் உடலிலிருந்து ஆத்மாவை விடுவிப்பதாக அனாமதேய குரல் வினோத்தை மிரட்டுகிறது. இதனால் நடுங்கி, பதற்றத்துக்குள்ளாகும் வினோத் தன் கட்டுப்பாட்டை இழக்கிறார்.
அரசு நூலகத்தில் கிளர்க் வேலை செய்கிறார் செல்வம் (வினோத் கிஷன்). பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளியான இவருக்கு சிறுநீரகப் பிரச்சினை. மாற்று சிறுநீரகத்தைப் பொருத்த 80 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அப்பா, அம்மா, உறவுகள் என்று யாரும் இல்லாத சூழலில் தெரிந்தவர்களிடம் உதவி கேட்கிறார். பிறகு, அப்பா செய்து வந்த ஆவியை விரட்டும் வேலையைக் கையில் எடுக்கிறார். ஆனால், அந்த வேலையில் பெரிய ஆபத்தைச் செல்வம் சந்திக்கிறார். இதனால் அவரின் வீட்டை இன்னொருவர் அபகரிக்கிறார்.
மனநல நிபுணரான இந்திரனை (குமார் நடராஜன்) அவரிடம் கவுன்சிலிங் பெறும் ஒருவரே துப்பாக்கியால் சுட்டு, தன்னையும் மாய்த்துக்கொள்கிறார். அதற்கு முன் இந்திரனின் குடும்பத்தையும் கொன்றுவிடுகிறார். இந்திரன் கோமாவுக்குச் சென்று 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டெழுகிறார். ஆனால், அவர் தன் குரலை இழக்கிறார். அவர் கவுன்சிலிங் கொடுக்கும் முறையில் சிக்கல் இருப்பதாகக் கருத்தும் மருத்துவக் கவுன்சில், அவர் கவுன்சிலிங் கொடுக்கத் தடை விதிக்கிறது. இதனால் இந்திரன் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்.
இந்த மூவருக்கும் உள்ள தொடர்பு என்ன, எந்தக் காலகட்டத்தில் இதெல்லாம் நிகழ்கின்றன, மூவரையும் இணைக்கும் கதாபாத்திரம் யார், அதற்கான பின்புலம் என்ன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சொல்கிறது திரைக்கதை.
மிகவும் குழப்பமான, சிக்கலான கதைக்களம். அதை மிக நேர்த்தியாகக் கொடுத்து அசரவைக்கிறார் இயக்குநர் விக்னராஜன். படத்தின் தொடக்கத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், காலகட்ட மாற்றம் என அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தக்கவைக்கிறார்.
தன்னை மிரட்டும் குரல் கேட்டு நடுங்கி, பயந்து, பரிதவித்து, உதவி கேட்டு கெஞ்சி, காரணம் கண்டறிய ஓடிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் செம்ம ஃபிட். குரலில் குட்டி ரகுவரனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர் நடிப்பிலும் சளைத்தவன் இல்லை என்று நிரூபித்துள்ளார். நண்பனின் நிலைக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியையும் சரியாகப் பிரதிபலிக்கிறார். 'கைதி' படத்துக்குப் பிறகு அர்ஜுன் தாஸ் தன் கதாபாத்திரத்தை லாவகமாகக் கையாண்டுள்ளார். இனி, நிறையத் திரைப்படங்களில் அவரைப் பார்க்கலாம்.
'நான் மகான் அல்ல' படத்துக்குப் பிறகு சில படங்களில் வினோத் கிஷன் நடித்திருந்தாலும் இது மிகச் சிறந்த மறுவருகை என்று சொல்லலாம். அப்பாவின் வீட்டைப் பாதுகாப்பதற்காகத் தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று சொல்வதும், மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த பிறகும் நேர்மையாக இருப்பதும் அவரது கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. அமானுஷ்ய விஷயங்கள் செய்யும்போதும் அளவான நடிப்பில் கவர்கிறார்.
குமார் நடராஜன் இருவிதமான பரிமாணங்களில் வருகிறார். குரல் வழி நடிப்பிலேயே மனிதர் அதகளம் செய்து அப்ளாஸ் அள்ளுகிறார். ''ஞாபகம் ஒரு அரக்கன். அதைத் தட்டுற விதத்துல தட்டிவிடணும். அதைவிட முக்கியம். அதைத் தட்ட வேண்டியவன் தான் தட்டணும்'', ''எது எப்படி இருந்தாலும் நான் சரியா புடிச்ச தப்பான ஆளு நீ'' எனப் பேசுவது வேற லெவல்.
பூஜா ராமச்சந்திரன் திரைக்கதையின் கண்ணிகளைச் சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். வினோத் கிஷனின் மாமாவாக நடித்திருப்பவர் யதார்த்தமான நடிப்பில் ஈர்க்கிறார். பாசத்தையும் கோபமாக வெளிப்படுத்தும் இடங்களில் ஜொலிக்கிறார். அர்ஜுன் தாஸின் தோழியான மிஷா கோஷல் உறுதுணை பாத்திரமாக மிளிர்கிறார்.
அமானுஷ்ய த்ரில்லருக்கான ஃபிரேம்கள், லைட்டிங்கில் எட்வின் சகாயின் உழைப்பு தெரிகிறது. அர்ஜுன் தாஸ் வீடு முழுக்க பேப்பர்களை ஒட்டும் இடத்திலும் ஒளிப்பதிவு பளிச். இசையிலும், பின்னணியிலும் பிரதீப் குமார் பிரமாதம். நான் லீனியர் கதை என்பதால் எடிட்டிங் சற்று பிசகினாலும் குழப்பம் நேரும். அந்த விதத்தில் சத்யராஜ் நடராஜன் நேர்த்தியான எடிட்டிங்கில் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளார்.
படத்தின் வசனங்களால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குநர் விக்னராஜன்.
''தோல்விங்கிறது சாதாரணமான ஒரு விஷயம்தான். நாம தைரியமா பார்க்க முடியும். அதுவே ஒரு தப்பு பண்ணா அந்தக் குற்ற உணர்ச்சி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கும். எந்தப் பக்கமா இருந்தாலும்''.
''நம்ம பண்ண தப்புல இருந்து எவ்ளோ வேணும்னாலும் ஓடலாம், ஆனா தப்பிக்க முடியாது''.
''ஒரே மழையில 9 ஜெனரேஷன் பின்னாடி போய்டுவியா''. ''கோ டூ ஹெல். ஐ யம் ஆல்ரெடி இன் ஹெல்''.
''காத்து கருப்புல்லாம் நீ நினைக்குற மாதிரி சாதாரண விஷயமில்ல. நான் பார்க்காத கருப்பா. பார்த்துக்குறேன் சார்''.
''எதுவும் இல்லாம ஏன்டா என் உயிரை எடுக்குற, இன்னும் எடுக்கலையே''.
''சாவுறதுன்னு முடிவு பண்ணிட்டல்ல. அப்போ தைரியமா நான் சமைச்சதை என்கூட சாப்பிட்டுட்டுப் போ''
''இந்த உலகத்துல பார்க்க எந்தத் தகுதியான விஷயமும் இல்லை'' ஆகிய வசனங்கள் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
அமானுஷ்யம் என்றால் நம்பமுடியாதவைதான். இயற்கைக்கு மாறானவைதான். அதற்காக அமானுஷ்யத்தின் விளைவுகள் எனக் காட்சிப்படுத்தியிருப்பது ஓவர் டோஸ். குறிப்பிட்ட வகை நிபுணர்களைச் சித்தரித்த விதமும் ஏற்புடையதாக இல்லை.
2.51 மணி நேரப் படம். ஆனால், கதைக் கருவின் மையத்தைத் தொடவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆவதுதான் கொஞ்சம் அலுப்பு. அதற்குப் பிறகு சஸ்பென்ஸை வேற லெவலில் கொண்டுபோகிறார். காரணம் தெரியும்போதுதான் இன்னும் கொஞ்சம் சிறந்ததாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பொறுமையைக் கொஞ்சம் சோதித்தாலும் ரசிகர்களை இப்படம் ஏமாற்றவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT