Published : 24 Nov 2020 10:30 PM
Last Updated : 24 Nov 2020 10:30 PM
’ஜனகராஜ் எனக்கு மகன் மாதிரி. ‘காதல் ஓவியம்’ படத்தை, ரசித்து ரசித்து நான் எடுத்த காட்சிகளை ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள். ஆபரேட்டர் ரூமிலிருந்து படம் பார்த்த நான் அழுதுகொண்டே இருந்தேன்’ என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
‘காதல் ஓவியம்’ படம் பற்றிச் சொல்லவேண்டும். அதில் ராதா நாயகி. நடனக்காரி. ஜனகராஜ், என் மகன் மாதிரி. அவனுக்கு ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் அற்புதமான கேரக்டர் கொடுத்தேன். எங்களுக்கு எதிர் வீட்டில்தான் ஜனகராஜ் வீடு. நான், இளையராஜா, கங்கை அமரன் எல்லோரும் இருப்போம். எங்களுக்கு டீ வாங்கிக்கொண்டு வருவான். கடைக்குப் போய் வரச் சொன்னால் சென்று வருவேன்.
முதன் முதலில் நாடகத்தில்தான் ஜனகராஜை நடிக்கவைத்தேன். பிறகுதான் சினிமாவுக்குக் கொண்டு வந்தேன். அடுத்து, ‘காதல் ஓவியம்’ படத்தில் ஜனகராஜை நடிக்கவைத்தேன். ராதாவுக்கு கணவராக நடித்தான். ரசித்து ரசித்து எடுத்தேன்.
இதிலென்ன ஆச்சரியம் தெரியுமா? படம் ஆரம்பித்து ஜனகராஜ் நடித்து முடிக்கும் வரை, இந்தப் படத்தில்தான் நடிக்கிறோம் என்றே தெரியாது. ‘வாங்க அப்பச்சி...’, ‘என்ன பண்றீக...’ என்று பிரமாதமாகப் பேசி நடித்தான். எல்லாம் முடிந்ததும் டப்பிங் பேசக் கூப்பிட்டேன். ‘நான் நடிக்கவே இல்லியே’ என்றான். ‘டேய் நீ நடிச்சிருக்கேடா’ என்று படத்தைப் போட்டுக் காட்டினேன். அதிர்ச்சியானான். டப்பிங் பேசிக் கொடுத்தான். மிகச்சிறந்த நடிகன்.
இதைச் சொல்லவேண்டுமா என நினைச்சேன். ஜனாவுக்கு இப்படியொரு கதை உண்டு. இருந்தாலும் சொல்லலாம். தப்பே இல்லை. ஜனகராஜ் என்னை மன்னித்துவிடுவான். தெரியாமலேயே இப்படி நடித்திருக்கிறானென்றால், உணர்ந்து நடித்திருந்தால் எப்படி நடித்திருப்பான்? இந்த ஒரு படம் அப்படி இருந்தான். அடுத்து எங்கேயோ போய்விட்டான்.
அதன் பின்னர், ஜனகராஜுக்கு ஒரு லவ். பிஜித்தீவு பெண். கல்யாணமெல்லாம் நடந்தது. பிறகு அப்படியே போனான். இப்போது மீண்டும் வந்திருக்கிறான். சினிமா உலகம் அவனை விட்டுவிடக்கூடாது.
‘காதல் ஓவியம்’ படத்துக்கு வருவோம்.
படம் பார்த்துவிட்டு பலரும் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘சார், கனவுக்கன்னி மாதிரி ராதா. அவரை பேரே தெரியாத நடிகருக்கு ஜோடியாக்கிட்டீங்களே’ என்றார்கள். எதுஎப்படியோ... ‘காதல் ஓவியம்’ எனக்கு ரொம்பவே பிடித்தபடம். லொகேஷனெல்ல்லாம் கவிதை மாதிரி இருக்கும். காட்சியெல்லாம் கவிதை பேசும்.
படம் வந்ததும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். க்ளைமாக்ஸ். பாட்டு தீர்ந்துவிட்டது. ஆனால் கொஞ்சம் காட்சிகள் தேவை. சரி... க்ளோஸப், கண்கள் என்று எடுக்கச் சொன்னேன். இளையராஜாவை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். படம் எடுத்ததைப் போட்டுக் காட்டி, பாடலைகொஞ்சம் விரிவுபடுத்த வேண்டும் என்று சொன்னேன். ‘என்னய்யா இது’ என்றான் இளையராஜா. ‘தத்தகாரம் போடு. அதெல்லாம் நீ பண்ணிருவே’ என்றேன். எஸ்.பி.பி. வந்தான். மிரண்டு போனான். பிறகு இளையராஜா இசையமைத்து சேர்த்தான். பாலு பாடினான். இளையராஜாவால் மட்டும்தான் இப்படி செய்யமுடியும். பாலுவால் மட்டும்தான் இப்படி பாட முடியும்.
இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்குப் போனேன். நான் எதை எதையெல்லாம் ரசித்து எடுத்தேன்? ஏவிஎம்.ராஜேஸ்வரி தியேட்டரில் படம் பார்த்தேன். நான் ரசித்து ரசித்து எடுத்த காட்சிகளிலெல்லாம் ரசிகர்கள், ‘ஆய்’ ‘ஊய்’ என்றெலாம் கத்தினார்கள். ஆபரேட்டர் ரூமிலிருந்து படம் பார்த்தவன், அப்படியே அழுதுவிட்டேன். மக்களின் ரசனை தெரியவில்லை.
பொருளாதாரத்தில் என்னை நஷ்டப்படவைத்தது ‘காதல் ஓவியம்’. ஆனாலும் எனக்கு கெளரவம் தேடிக்கொடுத்த படம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்.
ராதாவை, புதுப்பையன் தாடிக்காரப் பையனுக்கு ஜோடி என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் படம் பார்த்தாலும் பாடல் கேட்டாலும் புல்லரிக்கும் எனக்கு. ‘காதல் ஓவியம்’ படம்தான் என் படத்தை நான் கடைசியாக தியேட்டருக்குச் சென்று போய்ப் பார்த்தது. அதன் பிறகு தியேட்டரில் படங்கள் பார்ப்பேன். என் படத்தை தியேட்டரில் நான் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்’.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT