Published : 21 Nov 2020 06:45 PM
Last Updated : 21 Nov 2020 06:45 PM
'சசிகலா' என்கிற திரைப்படத்தை எடுக்கபோவதாகவும், படம் அடுத்த வருடம் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு முன்பு வெளியாகும் என்றும் இயக்குநர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
90களில் 'ஷிவா', 'சத்யா', 'கம்பெனி' உள்ளிட்ட, மும்பை நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ராம் கோபால் வர்மா. ஆனால் கடந்த பத்து வருடங்களில் ’சர்கார்’ பட வரிசையைத் தவிர இவரது எந்தப் படமும் இவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.
சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகள், அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் ராம் கோபால் வர்மா இருந்து வருகிறார். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு படங்களை இயக்கி, வெளியிட்டு, அதன் மோசமான விமர்சனங்கள் மூலமும் இன்னமும் பேசப்பட்டு வருகிறார் வர்மா.
சமீபத்தில் கூட 'க்ளைமேக்ஸ்', 'நேக்கட்', 'த்ரில்லர்' என தொடர்ந்து ஆபாசம் நிறைந்த படங்களை இயக்கி, அதை தனக்கென ஒரு ஓடிடி தளத்தை உருவாக்கி, அதில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினார். தற்போது 'சசிகலா' என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக அறிவித்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் வர்மா, "சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும். அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும்.
லக்ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவை தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த மிகவும் சிக்கலான, சதிகள் நிறைந்த உறவைப் பற்றியக் கதை.
நெருக்கமாக இருக்கும்போது தான் மிக எளிதாகக் கொல்ல முடியும் - பண்டைய தமிழ் பழமொழி" என்று குறிப்பிட்டுள்ளார்.
Making a film called SASIKALA.. it’s about what a woman S and a man E did to a Leader ..Film will release before TN elections on the same day as the biopic of the Leader
“it is easiest to kill , when you are the closest”
-Ancient Tamil Saying pic.twitter.com/VVH61fxLL5
ஏற்கனவே என்.டி.ஆர் பயோபிக்குக்குப் போட்டியாக 'லக்ஷ்மி’ஸ் என்.டி.ஆர்' என்கிற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கி வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT