Published : 20 Nov 2020 07:01 PM
Last Updated : 20 Nov 2020 07:01 PM

'லால் சிங் சட்டா' படத்தில் மற்றுமொரு கவுரவத் தோற்றம்: சல்மானிடமும் பேச்சுவார்த்தை

ஷாரூக்கானைத் தொடர்ந்து சல்மான்கானும் 'லால் சிங் சட்டா' திரைப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம். தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஷாரூக்கான் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அதை ஆமிர்கானே இயக்கியிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது சல்மான் கானையும் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

'ஃபாரஸ்ட் கம்ப்' கதையின்படி, பிரதான கதாபாத்திரம் உண்மையில் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுப்பதைப் போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ரீமேக்கில் அதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளனர்.

ஆமிர்கான் கதாபாத்திரம், 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தில் ஷாரூக்கான் நடித்த ராஜ் என்ற கதாபாத்திரத்தைச் சந்திப்பதாகக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 25 வருடங்கள் இளமையாகத் தோன்ற ஷாரூக் கானுக்கு விசேஷ ப்ராஸ்தடிக் ஒப்பனையும், கிராஃபிக்ஸ் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் சில மறக்க முடியாத திரைப்படங்களின் காட்சிகளும், அதில் அந்தந்த நடிகர்களும் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வரிசையில் சல்மான்கானையும் நடிக்க வைக்க அணுகியுள்ளனர். 90களில் வெளியான 'ஹம் ஆப்கே ஹை கவுன்' அல்லது 'ஹம் ஸாத் ஸாத் ஹைன்' போன்ற படங்களில் ஏதாவது ஒன்றைப் படக்குழு தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிகிறது. சல்மான்கான் நடிக்க ஒப்புக்கொண்டால் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மூன்று கான் நடிகர்களும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

'லால் சிங் சட்டா'வில் நாயகனின் உயிர் நண்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x