Published : 19 Nov 2020 02:56 PM
Last Updated : 19 Nov 2020 02:56 PM
தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி பரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளர் மீது நடிகர் அக்ஷய் குமார் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ரஷீத் சித்திக் என்பவர் எஃப் எஃப் நியூஸ் என்கிற யூடியூப் சேனலைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து அது தொடர்பாகப் பல தவறான தகவல்களைத் தனது யூடியூப் சேனல் மூலம் செய்தியாக்கித் தந்துள்ளார். இதனால் இவருக்குக் கடந்த சில மாதங்களில் மட்டும் புதிதாக 2.5 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளனர். மேலும் மாதம் சில நூறு ரூபாயை மட்டுமே தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்து வந்த ரஷீத், கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
ஏற்கெனவே சுஷாந்த் வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்தி பரப்பி அதனால் கைது செய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்த வழக்கு விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றமும் ரஷீதுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது மீண்டும் ஒரு செய்தி மூலம் ரஷீத், சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். சுஷாந்த் வழக்கில், ரியா சக்ரபர்த்தி நாடு விட்டுத் தப்பித்துச் செல்ல அக்ஷய் குமார் உதவியதாகவும், சுஷாந்தின் மரணம் குறித்து உத்தவ் மற்றும் ஆதித்யா ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் தேர்வானதில் அக்ஷய் குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டதே காரணம் என்றும் இதில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ரஷீத் மீது அக்ஷய் குமார் ரூ.500 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். 25 வயதான ரஷீத், பிஹாரைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் தனது யூடியூப் சேனலின் மூலம் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT