Last Updated : 18 Nov, 2020 05:23 PM

 

Published : 18 Nov 2020 05:23 PM
Last Updated : 18 Nov 2020 05:23 PM

இனிமேல் சிவாஜியைக் கிண்டல் செய்ய மாட்டோம்! - 'கலக்கப்போவது யாரு' குழுவினர் உறுதிமொழி 

சென்னை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனைக் கேலியும், கிண்டலும் செய்வது மாதிரி ஒளிபரப்பான அத்தியாயம் வைரலானதோடு நடிகர் பிரபுவுக்குக் கடும் கோபத்தையும் வரவழைத்துள்ளது.

இதுகுறித்து முதலில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சித் தரப்பில் பேசியும் உள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, ''பொதுவாக நடிகர்களை மிமிக்ரி செய்யும்போது அது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும். விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'தில்லானா மோகனம்பாள்' போன்ற படங்களில் நடித்த நடிகர் திலகம் சிவாஜியை மிகவும் சங்கடப்படும்படியாகக் கிண்டல் செய்கின்றனர். அதுவும் மக்களை மிகப் பெரிய அளவில் சென்றடையும் ஒரு நிகழ்ச்சி வழியே இப்படி கேலியும், கிண்டலும் செய்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் சிவாஜியை எப்படி நினைப்பார்கள். அதனால்தான் கண்டனம் தெரிவித்தோம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர், 'இனி அந்த மாதிரி நடக்காது' என உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நடிகர் பிரபுவின் கவனத்துக்கும் சென்றது. அவர் நிகழ்ச்சியில் சிவாஜியின் வாயசைவு, நடிப்பு ஆகியவை குறித்துக் கிண்டல் செய்வதாகக் கேள்விப்பட்டு சேனல் தரப்பில் பேசியுள்ளார். அப்போது, 'இனிமேல் எந்த நிகழ்ச்சியிலும் சிவாஜி குறித்துக் கிண்டல் செய்ய மாட்டோம்' என சேனல் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்குபெறும் மதுரை முத்துவிடம் கேட்டபோது, ''நிகழ்ச்சியில் ஜெய்தான் சிவாஜி கணேசன் மாதிரி மிமிக்ரி செய்தார். இந்தச் சம்பவம் சிவாஜி குடும்பத்தினரை வெகுவாக பாதித்தது என்பதை அறிந்து உடனடியாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய், ஆதவன், நிகழ்ச்சி இயக்குநர் தாம்சன் ஆகிய மூவரும் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டனர். இனிமேல் இந்த மாதிரி நடக்காது என உத்தரவாதமும் அளித்தனர்!'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x