Published : 18 Nov 2020 04:59 PM
Last Updated : 18 Nov 2020 04:59 PM
நடிகை மம்தா மோகன்தாஸ் தனது பெயரில் சொந்தமாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். வளர்ந்து வரும் கதாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு வாய்ப்பு தரும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருப்பதாக மம்தா கூறியிருக்கிறார்.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மம்தா அன்றே இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த வருடம், மம்தா திரைத்துறைக்கு வந்து 15 வருடங்களை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
கடந்த மார்ச் மாதமே, புதிய திரைப்பட அறிவிப்புடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக இது தள்ளிப்போனது. தற்போது தான் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை இப்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
தனது தயாரிப்பு நிறுவனத்துக்கென ஒரு கதாசிரியர் குழுவை மம்தா நியமித்துள்ளார். இதில் கதைத் தேர்வு பற்றி பேசியுள்ள மம்தா, "நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேட்கிறோம். நான் ஒரு ஜனரஞ்சகமான படத்தைத் தான் இப்போது எடுக்க விரும்புகிறேன். இப்போது நிலவும் கடினமான சூழலில் மக்களை சிரிக்க வைக்கும் ஒரு கதை. பாடல், நடனம் என இலகுவான ஒரு படம்.
பொழுதுபோக்குப் படம் என்று நான் சொல்வது பிரம்மாண்டமான, அதே நேரம் நுணுக்கமான கதையம்சம் உள்ள ஒரு திரைப்படத்தை. நடிகை அனுஷ்கா சர்மா என் ஹெச் 10 திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியதுதான் என்னையும் தயாரிப்பாளராகத் தூண்டியது. எனது ஆரோக்கியம் நன்றாக இருந்திருந்தால் இன்னும் கூட சீக்கிரமாக ஆரம்பித்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இதனால் கிட்டத்தட்ட 4 வருடங்கள் துறையிலிருந்து விலகியிருந்தார். லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் இதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். எனவே அங்கு குடிபெயர்ந்தார். தற்போது இந்தியா - அமெரிக்கா என அடிக்கடி பயணப்படும் மம்தா அடுத்த வருடம் இந்தியாவுக்கு நிரந்தரமாகக் குடிபெயரும் திட்டமிருப்பதாகக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT