Published : 16 Nov 2020 07:22 PM
Last Updated : 16 Nov 2020 07:22 PM

'சூரரைப் போற்று' முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்: விஜய் தேவரகொண்டா

'சூரரைப் போற்று' திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது.

திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிப் பகிர்ந்துள்ளார்.

" 'சூரரைப் போற்று' திரைப்படத்தை என் பெரிய நண்பர்கள் கூட்டத்தோடு பார்த்தேன். அனைவரும் ஆண்கள். 3 பேர் படம் பார்த்து அழுதனர். வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் சாதிப்பதைப் பார்த்து நான் படம் முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்.

சூர்யா அண்ணா, என்ன ஒரு அட்டகாசமான நடிகர். ஒரு நடிகராக முழு அர்ப்பணிப்பையும் தந்து நடிக்கும்போது அவர் மீது அன்பை மட்டுமே உணர முடியும். அதைத் தயாரிப்பாளராகவும் ஆதரித்தது முக்கியமானது.

அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான பெண்களை சுதா எங்கே தேடிப் பிடிக்கிறார் என்று அதிசயிக்கிறேன். மிகவும் இயல்பாக, தனது நடிப்பின் மீது முழு கட்டுப்பாடு இருப்பவராகத் தெரிகிறார். சுதா, உங்களுடன் விரைவில் பணியாற்றுவேன். ஒரு இயக்குநராக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு இது.

ஜி.வி.பிரகாஷின் உயர்தரமான இசை, நிகேத் பூமியின் சிறப்பான ஒளிப்பதிவு, துணை நடிகர்களின் உயர்ந்த நடிப்பு. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. எனவே, 'சிம்ப்ளி ஃப்ளை' புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். தமிழ் அல்லது தெலுங்கில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்".

இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x