Published : 11 Nov 2020 10:53 AM
Last Updated : 11 Nov 2020 10:53 AM
தனது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டதற்கு நடிகர் பிருத்விராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபத்தில் அவர் நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆறு வயது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படங்களுடன் ஒரு நீண்ட வாழ்த்துப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிருத்விராஜ் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவையும், புகைப்படங்களையும் பலரும் பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாரோ ஒருவர் பிருத்விராஜ் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் அந்தப் புகைப்படங்களையும், பழைய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா இருவரால் நிர்வகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது என்று பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''இந்தப் போலியான பக்கம் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் பக்கத்தை நாங்கள் நிர்வகிக்கவில்லை. ஒரு ஆறு வயதுக் குழந்தைக்கு சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்குவதற்கான எந்தத் தேவையும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. அவர் வளர்ந்ததும் அதுகுறித்து அவர் முடிவு செய்து கொள்வார். எனவே, இதுபோன்றவற்றை நம்ப வேண்டாம்''.
இவ்வாறு பிருத்விராஜ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT