Published : 10 Nov 2020 05:28 PM
Last Updated : 10 Nov 2020 05:28 PM
'முனி' திரைப்படத்தில் ஆரம்பித்த அதை கதைதான் அடுத்த 3 பாகங்களிலும் தொடர்ந்தது. அதில் காஞ்சனாவின் ரீமேக்தான் இந்த 'லக்ஷ்மி'. ஒரே வித்தியாசம் இதில், பேய் இருப்பது நிரூபணமானால் வளையல் அணிந்து கொள்கிறேன் என்று சவால் விடும் அளவுக்கு நாயகன் தைரியசாலி. மற்றபடி அதே பேய், அதே பழிவாங்கல், இறுதியில் அடுத்த பாகத்துக்கான ஒரு அறிகுறி.
அக்ஷய் குமார் உள்ளிட்ட எந்த நடிகர்களுமே தங்கள் கதாபாத்திரங்களை 100 சதவீதம் உணர்ந்து நடித்தது போலத் தெரியவில்லை. அக்ஷய் குமார் திருநங்கையாக மாறும் காட்சிகளில் மட்டும் ஜொலிக்கிறார். கியாரா அத்வானியின் அழகை அவரது போலியான நடிப்பு கெடுக்கிறது. ராஜேஷ் சர்மா, ஆயிஷா, மனு ரிஷி, அஷ்வினி என குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் நாடகங்களில் அதிகபட்ச நடிப்பைத் தருவதைப் போலவே வருகிறார்கள். ஒருவேளை 'காஞ்சனா'வில் கோவை சரளா, தேவதர்ஷினி இணை நமக்குப் பழக்கப்பட்டுவிட்டதால் இது பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.
பாடல்கள் வைக்கப்பட்ட விதமே அதிர்ச்சியைத் தருகிறது. இறுதிப் பாடல் மட்டும் சற்று பரவாயில்லை. ஃபிளாஷ்பேக்கில் திருநங்கையாக நடித்திருக்கும் ஷரத் கேல்கர் மொத்தப் படத்துக்கும் பரிகாரம் செய்வதுபோல அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார். இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளும் 'காஞ்சனா'வில் தந்த தாக்கத்தைக் கிட்டத்தட்ட தந்துவிடுகிறது.
ஒரு வெற்றிபெற்ற படத்தை ரீமேக் செய்யும்போது முடிந்தவரை எதையும் மாற்றாமல் காட்சிக்குக் காட்சி அப்படியே எடுப்பதே வழக்கம். இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. 'லக்ஷ்மி' திரைப்படத்திலும் ஒருசில மாற்றங்களைத் தாண்டி காட்சிக்குக் காட்சி அப்படியே எடுத்திருக்கிறார்கள்.
'காஞ்சனா' வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், இந்தக் காலகட்டத்தில் மக்களின் ரசனை வளர்ந்திருக்கும், இதேபோன்ற பல நூறு படங்களை அவர்கள் பார்த்திருப்பார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு கண்டிப்பாக கதை சொல்லப்பட்ட விதத்தில் புதிதாக எதையாவது செய்திருக்கலாம்.
நாயகன் தைரியசாலி எனும்போது அசலில் நகைச்சுவைக்காக இருந்த வாய்ப்புகள் இங்கு காணாமல் போகின்றன. பள்ளி மேடை நாடக அளவிலேயே இருக்கும் நடிகர்களின் நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்பும் படத்தை வெகுவாகப் பாதித்துள்ளன. ஃபிளாஷ்பேக், கடைசிப் பாடல், அக்ஷயின் நடனம் என ஒரு சில சாதகங்கள் மட்டுமே படத்தை ஓரளவு காப்பாற்றுகின்றன.
நீங்கள் திகில் நகைச்சுவைப் படங்களையே பார்க்காதவர் என்றால் ஒருவேளை இந்த 'லக்ஷ்மி' உங்களை ஈர்க்கலாம். மற்றபடி மழையில் நனைந்த லக்ஷ்மி வெடியாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது இந்தப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT