Published : 09 Nov 2020 08:13 PM
Last Updated : 09 Nov 2020 08:13 PM
நடிகர் ராணா 'சவுத் பே லைவ்' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
'லீடர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்துத் தேசிய அளவில் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்த வெளியீடாக பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான 'காடன்', தமிழ் - தெலுங்கு - இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் 'அவள்', 'நெற்றிக்கண்' ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.
தெலுங்குத் திரையுலகில் கிராஃபிக்ஸ் கலைஞராகத்தான் தனது பணியை ராணா தொடங்கினார். மகேஷ் பாபுவின் 'சைனிகுடு' திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் பொறுப்பை ராணாதான் கவனித்தார். இதற்காக அவருக்கு நந்தி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது யூடியூப் சேனல் ஒன்றை ராணா தொடங்கியுள்ளார். 'சவுத் பே லைவ்' (South Bay Live) என்று இந்த சேனலுக்குப் பெயர் வைத்துள்ளார். இதில் பல மொழிகளில் 10 விநாடிகளிலிருந்து 10 மணி நேரங்கள் வரை பல்வேறு காணொலிகள் காணக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரபலங்கள், இசை, நாட்டு நடப்பு, அனிமேஷன் உள்ளிட்ட தலைப்புகளில் இதன் படைப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த சேனலில் ஒரு மாதத்துக்கு முன்பே, பிரபல தெலுங்கு நடிகர் லக்ஷ்மி மஞ்சு வழங்கும் 'கமிங் பேக் டு லைஃப்' என்கிற நேர்காணல் நிகழ்ச்சிக்கான டீஸர் பகிரப்பட்டது. சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் முழு காணொலி பதிவேற்றப்பட்டிருந்தது.
இன்று (நவம்பர் 9) ராணாவே தொகுத்து வழங்கும் 'வை ஆர் யூ' என்கிற வித்தியாசமான நிகழ்ச்சியின் முன்னோட்டம் பகிரப்பட்டுள்ளது. இதில் ராணாவின் முகம் மட்டும் இருக்க, உடல் கார்ட்டூன் கதாபாத்திரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சி பற்றி ராணா குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT