Published : 06 Nov 2020 07:39 PM
Last Updated : 06 Nov 2020 07:39 PM
எஸ்.ஏ.சிக்கும் விஜய்க்கும் பிரச்சினை இருப்பதை ஷோபா உறுதிப்படுத்தியுள்ளார்.
'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்தில் கட்சியொன்றைப் பதிவு செய்துள்ளார். இது செய்தியாக வெளியானதிலிருந்து விஜய் - எஸ்.ஏ.சி மோதலாக உருவாகியுள்ளது.
தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும், எனது பெயரையோ புகைப்படத்தையோ உபயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் விஜய் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தன் ரசிகர்கள் தந்தையின் கட்சியில் இணைய வேண்டாம், கட்சிப் பணியாற்ற வேண்டாம் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக எஸ்.ஏ.சி, அது அவருடைய கருத்து என்று மழுப்பலாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா, கணவர் எஸ்.ஏ.சிக்கும் விஜய்க்கும் பிரச்சினை இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அளித்துள்ள பேட்டி:
"அசோசியேஷன் ஒன்று ஆரம்பிக்கிறேன். அதற்கு கையெழுத்து வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கேட்டார். நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்துப் போட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பு இன்னொரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். கட்சிப் பதிவு செய்வதற்கு என்று நான் புரிந்துகொண்டேன்.
விஜய்க்குத் தெரியாமல் நீங்கள் பண்ணுவதால் நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்று என் கணவரிடன் சொல்லிவிட்டேன். முதலில் போட்டுக் கொடுத்த கையெழுத்தைக் கூட நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டேன்.
இதனால் நான் இப்போது கட்சிக்குப் பொருளாளர் எல்லாம் கிடையாது. எனக்குப் பதிலாக வேறொருவரைப் பொருளாளராகப் போட்டுக் கொள்வதாக என் கணவர் சொல்லிவிட்டார்.
அரசியல் விஷயங்களை எல்லாம் மீடியாவில் பேச வேண்டாம் என்று விஜய் பல தடவை சொல்லியும் என் கணவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் விஜய் இப்போது அவரிடம் பேசுவதில்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்”.
இவ்வாறு விஜய்யின் தாயார் ஷோபா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT