Published : 06 Nov 2020 04:10 PM
Last Updated : 06 Nov 2020 04:10 PM
கட்சி தொடங்கியது, விஜய் அறிக்கை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தனியாக வாங்க சொல்கிறேன் என்று எஸ்.ஏ.சி மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 6) டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. பலரும் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்று கருதிய வேளையில், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி செய்திருக்கிறார்.
இதற்கு விஜய் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. "என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புப்படுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
விஜய் அறிக்கை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய் - எஸ்.ஏ.சி மோதல் என்று பலரும் கருதினார்கள். விஜய் அறிக்கை தொடர்பாக எஸ்.ஏ.சியின் கருத்தை தெரிந்து கொள்ள அவரை அணுகி வந்தார்கள். இன்று (நவம்பர் 6) காலை முதலே எஸ்.ஏ.சியின் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மதியம் 2 மணியளவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் எஸ்.ஏ.சி. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளும், எஸ்.ஏ.சியின் பதில்களும் பின்வருமாறு:
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவசியம் என்ன?
எனக்குத் தேவைப்பட்டது செய்கிறேன்.
அதற்கு விஜய் என் பெயரையோ, புகைப்படத்தையோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுவது போல் சொல்லியிருக்கிறாரே?
அதை அவர் சொல்லியிருக்கிறார்.
நீங்கள் தொடங்கியிருக்கும் இயக்கத்தில் பெயரிலேயே விஜய் இருக்கிறதே. தொடர்ச்சியாக 5 ஆண்டு காலமாக நீங்களும் விஜய்யும் பேசிக் கொள்வதில்லை என்று சொல்கிறார்களே?
தனியாக வந்தீர்கள் என்றால் விளக்கம் சொல்வேன். மற்றவர்களின் கற்பனைக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கரோனா நேரத்தில் 2-3 முறை போனேன், பேசினேன். யாரோ ஒருத்தர் பேசுறாங்க. அதற்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜய்க்கு தெரியாமல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் அவர் அறிக்கையின் முதல் வரியிலேயெ ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் என்கிறாரே..
அவருக்கு தெரியவில்லை என்று அவர் சொல்கிறார். விஜய் பெயரில் கட்சி தொடங்கவில்லை. அவருடைய பெயரில் 93-ல் ஆரம்பித்த அமைப்பு. ரசிகர் மன்றமாக தொடங்கி, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அதில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தேன். ஏனென்றால் அவர்கள் நல்ல விஷயங்கள் நிறைய செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்திருக்கிறேன்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கான அவசியம் எனக்கிருக்கிறது என்று சொன்னீர்கள். மக்களுடைய அவசியத்துக்காகத் தொடங்கவில்லையா. உங்களுடைய இலக்கு தான் என்ன?
சொல்றேன். மெதுவா சொல்றேன். தனியா வாங்க சொல்றேன்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இது ரொம்ப தேவை என நினைக்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை.
பதில் இல்லையா.. பதில் சொல்ல நேரமில்லையா?
பதில் சொல்ல நேரமில்லை.
இளைய தளபதி விஜய் என்று சொன்னாலே, தமிழகத்தில் அனைவருக்கும் நடிகர் விஜய் தான் என தெரியும். என்னுடைய ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணைய வேண்டாம், சேர வேண்டாம் என்று விஜய்யே சொல்லும் போது நீங்கள் கூறும் பதிலை நாங்கள் எப்படி புரிந்து கொள்வது?
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
தொடக்கத்திலேயே உங்களுக்கு தடுமாற்றமாக இல்லையா?
(சிரித்துக் கொண்டே) நல்லது நினைத்து அனைத்தையும் ஆரம்பிக்கிறோம். எல்லாமே நல்லது நடக்கும்.
என்ன நல்லது நினைத்தீர்கள்?
இத்தனை மைக் முன்னாடி பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. இத்தனை மைக் முன்னாடி பேசி பழக்கமுமில்லை. தனித்தனியாக வாங்க சொல்றேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT