Published : 31 Oct 2020 04:32 PM
Last Updated : 31 Oct 2020 04:32 PM
விஷால், தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' திரைப்படம் திரையரங்கில் தோல்வியடைந்தது. ஆனால் யூடியூபில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான 3 வாரங்களில் 7.4 கோடி பார்வைகளை ஈர்த்துள்ளது.
அதேபோல இந்தி டப்பிங்கில் விஜய்யின் 'ஜில்லா' படம் 12.3 கோடி பார்வைகளையும், 'பைரவா' படம் 10 கோடி பார்வைகளையும், தனுஷின் 'மாரி 2' படம் 9.3 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளன. 'தேவ்' 7.9 கோடி பார்வைகளையும், 'ரெமோ' 7.7 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளன.
என்னதான் நடக்கிறது?
கரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால், இணையத்தில் திரைப்படங்களைப் பார்ப்பது, முக்கியமாக இந்தி பேசும் ரசிகர்களிடையே தென்னிந்திய மொழிப் படங்களின் இந்தி டப்பிங் வடிவங்களைப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இது சமீபத்தில் நடந்தது கிடையாது. தென்னிந்திய மொழிப் படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அவற்றுக்கு யூடியூபில் கோடிக்கணக்கான பார்வைகள் வருவது அவ்வப்போது நடந்து வருவதுதான். ஆனால், அது இந்த ஊரடங்கு சமயத்தில் இன்னும் அதிகரித்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டு, பார்க் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தி சேனல்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களில் 11 சதவீதம் டப்பிங் திரைப்படங்களை விரும்புபவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வந்த படங்கள் மட்டுமே மொத்தமாக 13,500 கோடி மணி நேரங்கள் வரை பார்க்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசாலா படங்கள் மீதான ஈர்ப்பு
ஏன் இந்தி ரசிகர்களுக்குத் தென்னிந்தியத் திரைப்படங்கள் பிடிக்கின்றன?
90களில் பாலிவுட்டில் மசாலா படங்கள் வர ஆரம்பித்தன. அதிலிருந்துதான் சன்னி தியோல், சஞ்சய் தத் உள்ளிட நட்சத்திரங்கள் பிறந்தனர். முக்கியமான இடத்தில் இருந்த இதுபோன்ற படங்கள், காலப்போக்கில் மல்டிப்ளக்ஸுக்கு ஏற்ற படங்களால் அழிந்து போயின.
இந்தியில் இப்படியான மசாலா படங்கள் மொத்தமாகக் குறைந்த காரணத்தால்தான் பலர் டப்பிங் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தனர். வாம் இந்தியா என்கிற திரைப்பட விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், விநியோகஸ்தர் அனீஷ் தேவ் அதைத்தான் செய்தார். பிரபலமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்திருந்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் டப்பிங் வடிவம் இந்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுதான் தென்னிந்திய மசாலா படங்களின் வலிமையை அவருக்கு உணர்த்தியது.
"2000களில், சேனல்களில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்டோரின் பழைய திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். ஆனால் நாங்கள் வாங்கிய 'சந்திரமுகி' திரைப்படம்தான் திருப்புமுனையாக இருந்தது. அதன்பின் இன்னும் நிறைய தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களை வாங்க ஆரம்பித்தோம். தென்னிந்திய டப்பிங் படங்களுக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்ததால்தான் டாலிவுட் ப்ளே என்கிற தனி ஸ்ட்ரீமிங் தளத்தையே நான் ஆரம்பித்தேன்" என்கிறார் அனீஷ். இந்தத் தளம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் படத்தின் வகைகள்
அனீஷைப் பொறுத்தவரை டப்பிங் படங்களை ஏ ப்ளஸ், ஏ மைனஸ் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ப்ளஸ் வகையில் பெரிய நட்சத்திரங்கள் இருப்பார்கள். ஆனால், அதில் முதலீடு செய்த பணத்தை எடுப்பது கடினம். மைனஸ் பிரிவில் இரண்டாம் நிலை நாயகர்கள் இருப்பார்கள். அதுதான் இவர்களுக்குப் பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.
பெரும்பாலான சமயங்களில் டப்பிங் உரிமையைத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி, இவர்களுக்கென இருக்கும் ஒரு அணியை வைத்து டப்பிங் செய்து கொள்கின்றனர். இப்படி டப்பிங் செய்யும் கலைஞர்களை வைத்தே தனியாக ஒரு துணைத் துறை உருவாகியுள்ளது. இப்படிச் செய்வதால் தங்களால் தரத்தை மேற்பார்வையிட முடிகிறது என்கிறார் அனீஷ்.
சண்டைக் காட்சிகளும், பன்ச் வசனங்களும்
தென்னிந்திய மசாலா திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளும், பன்ச் வசனங்களும் கூட அவை வரவேற்பு பெற முக்கியக் காரணமாக இருக்கின்றன. "பாலிவுட்டை விட நமது சண்டைக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. இந்தி உரிமைத்தைக் கேட்டு வருபவர்களின் முதல் கேள்வியே, படத்தில் எத்தனை சண்டைக் காட்சிகள் உள்ளன என்பதுதான்" என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
ஆதித்யா மூவிஸின் நிர்வாக இயக்குநர் உமேஷ் குப்தா பேசுகையில், "பன்ச் டயலாக் என்று சொல்லப்படும் வசனங்கள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் இந்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கின்றன. சமீபகாலங்களில் குடும்பக் கதைகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் ’அ...ஆ...’ திரைப்படத்துக்கு 20 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன" என்கிறார்
இதேபோல மேடம் கீதா ராணி என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்ட 'ராட்சசி' திரைப்படத்துக்கு ஒரு மாதத்துக்குள் 10 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. திரையரங்கை விட டிஜிட்டல் தளத்தில் படம் நன்றாக ஓடுவதாகவும், படத்தின் டப்பிங் உரிமத்தில் கிடைத்த பணம், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தில் கிடைத்த பணத்துக்கு ஈடானது என்றும் கூறுகிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
அதே நேரம், நன்றாக விமர்சிக்கப்பட்டு, ஓடும் ஒரு மாநில மொழித் திரைப்படத்துக்கு இந்தி டப்பிங்கில் அதே வரவேற்பு கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. இதே விஷயம் அப்படியே எதிராகவும் நடக்கலாம்.
தெலுங்கில் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாணம்' என்ற திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஆன்லைனில் படம் 13.5 கோடி பார்வைகளைத் தாண்டியது தனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் இயக்குநர் சதீஷ். மேலும் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை இந்தி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும், யூடியூபில் பின்னூட்டங்களைப் படித்தபோது அது தெரிந்தது என்றும் கூறுகிறார் சதீஷ்.
யார், எங்கே, எப்படி?
இந்த டப்பிங் திரைப்பட ரசிகர்களை பாரத், இந்தியா என இரண்டு பிரிவுகளாகப் பார்க்கின்றனர். இதில் இந்தியா என்பது நகர்ப்புறத்து ரசிகர்கள். அவர்களால் ஓடிடி தளங்களிலும் சந்தா கட்டிப் பார்க்க முடியும். ஆனால், இந்த டப்பிங் படங்களின் பெரும்பாலான ரசிகர்கள் பாரத் பிரிவினர். இவர்கள் சிறு நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் தங்கள் மொழியிலேயே படம் பார்க்க வேண்டும் என்று விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரிடையே டப்பிங் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்கிறார் எஸ்.ஆர். பிரபு.
ஆனால், தற்போது யூடியூபின் மூலம் வரும் வருமானம் அவ்வளவு பெரியதில்லை என்கிறார் பிரபு. "உங்கள் படத்துக்கு 10 கோடி பார்வைகள் வந்தால் உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கலாம். இது சின்ன தொகையே. இதனால்தான் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு அதிக வருவாய் வரும் ரீமேக் உரிமத்தை விற்கவே விரும்புகிறார்கள்" என்று எஸ்.ஆர்.பிரபு கூறுகிறார்.
"நம் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு மசாலா படங்கள்தான் பிடிக்கும். மற்ற வகைப் படங்களை மீதியிருப்பவர்கள் பார்க்கின்றனர். எது நல்ல படம் என்பதை விட எது வரவேற்பைப் பெறுகிறது என்பது முக்கியம். எனவே வியாபாரம் என்று வந்துவிட்டால் பெரும்பாலானவர்களுக்கு எது பிடிக்கும் என்பதே எனக்கு முக்கியம். ஏனென்றால் அதுதான் வருவாயைத் தரும்" என்று வெளிப்படையாகப் பேசுகிறார் அனீஷ்.
- ஸ்ரீவத்சன் (தி இந்து, ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT