Published : 28 Oct 2020 06:43 PM
Last Updated : 28 Oct 2020 06:43 PM
ஆக்ஷன் த்ரில்லர் படங்களென்றாலே அதுவொரு கொண்டாட்டம்தான். கொள்ளைக்கூட்டத்தைப் பிடிக்க போலீஸ் அதிகாரியே கொள்ளையன் போல் நாடகமாடி, கொள்ளைக்கூட்டத்துக்குள் புகுந்து கொண்டு செய்கிற சாகசங்கள் எல்லாமே ஜேம்ஸ்பாண்ட் பாணி ஜெய்சங்கர் காலத்துக் கதைதான். ஆனாலும் சொன்ன விதத்திலும் காட்சி அமைப்புகளிலும் ரவுண்டுகட்டி மிரட்டியெடுத்ததுதான் ‘வெற்றிவிழா’வின் தனி பாணி!
போலீஸ் அதிகாரி வெற்றிவேல், ஜிந்தா எனும் கொள்ளைக்கூட்டத் தலைவனின் கோட்டைக்குள் ஆண்டனிராஜ் என்ற பெயரில் கெட்டவனாக நுழைந்து நம்பிக்கையைப் பெறுவார். ஒருகட்டத்தில், தன் மனைவியையே கொள்ளையர்களால் இழந்திருப்பார். அப்போது தப்பித்து வரும் வேளையில், மயக்கநிலையில் விழுந்துவிட, அவரை செளகார் ஜானகியும் பேத்தி சசிகலாவும் காப்பாற்றி அடைக்கலம் தருவார்கள்.
ஆனால், கண் விழித்த கமலுக்கு... அவர்தான் வெற்றிவேல். அவருக்கு தான் யார், தன்னுடைய பெயர் என்ன என்பவையெல்லாம் மறந்துபோயிருக்கும். இந்தசமயத்தில் சசிகலா கமலை விரும்புவார். தன்னைப் பற்றிய க்ளூ சின்னதாகக் கிடைக்க, சசிகலாவையும் அழைத்துக் கொண்டு, கோவாவில் இருந்து சென்னைக்கு வருவார் கமல்.
வந்த இடத்தில் அவர் பெயர் ஆண்டனிராஜ் என்று தெரியவரும். உடனே சசிகலா, ‘நானும் கிறிஸ்டின், நீங்களும் கிறிஸ்டின்’ என்று மகிழ்வார். அடுத்த கட்டத்திலேயே, ‘இதற்காக சந்தோஷப்பட்டுக்கொள்ளாதே. என் லாக்கரில் ஒவ்வொரு பெயரில் பாஸ்போர்ட்டுகள் உள்ளன. அநேகமாக நான் கெட்டவன் போல’ என்பார் கமல்.
இதனிடையே, ஒருபக்கம் கொள்ளைக்கூட்டம் துரத்தும். இன்னொரு பக்கம் போலீஸ் துரத்தும். குழம்பித்தான் போவார் கமல். அப்போது போலீஸ் உயரதிகாரியின் நம்பருக்கு போன் செய்தால் உண்மை தெரியும் என்று டிஸ்கோ சாந்தி சொல்ல, உயரதிகாரி ராதாரவி, அப்போதுதான் எல்லா உண்மைகளையும் சொல்லுவார். உண்மையான பெயர் வெற்றிவேல் என்றும் அமலா மனைவி என்றும் அவரை கொள்ளைக் கும்பல் கொன்றுவிட்டது என்றுமான தகவல்களைச் சொல்லுவார்.
இதையடுத்து, கொள்ளைக்கும்பல் துரத்தும் போது, மெல்லிசைக் குழு வைத்து நடத்திக் கொண்டிருக்கும் பிரபு மற்றும் குழுவினருடன் சேர்ந்துகொள்வார் கமல். பிரபுவும் குஷ்புவும் கணவன் மனைவி. கமலும் பிரபுவும் நண்பராவார்கள்.
ஜிந்தாவுக்கும் சாமியாருக்கும் தொடர்பு உண்டு என்பது தெரியவரும். சாமியாரைக் கொல்ல ஜிந்தா திட்டமிட, அதில் சாமியார் ஜனகராஜைக் காப்பாற்றிவிடுவார் கமல். பின்னர் குஷ்புவையும் சசிகலாவையும் ஜிந்தா பிடித்து வைத்துக்கொள்ள, அவர்களைக் காப்பாற்றவும் அழிக்கவும் கமலும் பிரபுவும் செல்வார்கள். அழிப்பார்கள். காப்பாற்றி அழைத்துவருவார்கள் என்பதுடன் படம் முடியும்.
இப்படி படம் முழுக்க டிவிஸ்ட் டிவிஸ்ட் டிவிஸ்ட் என்றே போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தை ஆங்கிலப் பட பாணியில் அமைத்திருப்பார்கள்.
கே.ராஜேஸ்வரும் சண்முகப்ரியனும் கதை வசனம் எழுத, பிரதாப் போத்தன் திரைக்கதை எழுதி இயக்கியிருப்பார். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், கமல், அமலா, சசிகலா, பிரபு, குஷ்பு, ராதாரவி, அபிலாஷா, டிஸ்கோ சாந்தி, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், மயில்சாமி, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள்.
பிரதாப் போத்தன் இயக்கிய படங்களில் எப்போதுமே ஆக்ஷனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சிவாஜி புரொடக்ஷன்ஸில் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கமல்தான் வழங்கினார் என்று பிரதாப் போத்தன் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்திலும் வில்லன் மிரட்டியிருப்பார். சத்யராஜை வைத்து இவர் இயக்கிய ‘ஜீவா’ படத்திலும் வில்லன் அசத்தியிருப்பார். இதில் ‘ஜிந்தா’ எனும் கேரக்டரில் சலீம் கெளஸ் அதகளம் பண்ணியிருப்பார். இவர் வருகிற காட்சிகளெல்லாம் கரவொலி எழுப்பும் அளவுக்கு வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். அவரும் புது மாடுலேஷனில் பேசியிருப்பார்.
‘சத்யா’, ‘பேசும்படம்’ போலவே இந்தப் படத்திலும் கமல், அமலா ஜோடி, பாந்தமான ஜோடியாக பேசப்பட்டது. அதேபோல் பிரபு - குஷ்பு ஜோடியும் கொண்டாடப்பட்டது. கமல் - சசிகலா இந்தப் படத்தில்தான் இணைந்தார்கள். சொல்லப்போனால் இந்த ஒருபடத்தில்தான் இணைந்து நடித்தார்கள்.
அசோக்குமாரின் ஒளிப்பதிவு அமர்க்களம். பெரும்பாலும் பிரதாப் போத்தன் படங்களென்றாலே இவர்தான் ஒளிப்பதிவாளர். படம் முழுக்கவே கேமிராவின் வண்ணங்களும் கோணங்களும் அசத்தல்.
அமலாவுடன் ரொமான்ஸ், சசிகலாவுடன் கல்யாணம், வில்லன்களுடன் மோதல், டிஸ்கோ சாந்தியுடன் ஆட்டம், பிரபுவுடன் சேர்ந்து டான்ஸ் என்று படம் முழுக்கவே கமலின் முத்திரைகள் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.
‘நாயகன்’, ‘பேசும்படம்’, ‘சத்யா’, ‘சூரசம்ஹாரம்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘அபூர்வ சகோதரர்கள்’ என்று தொடர்ந்து வெரைட்டி கொடுத்துக்கொண்டே இருந்த கமல், இந்தப் படத்தில் வேறொரு கேரக்டரில், வெற்றிவேல் எனும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அநாயசமாக நடித்திருந்தார்.
இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. டைட்டிலில் ‘மாறுகோ மாறுகோ...’ என்று இளையராஜா கங்கைஅமரனெல்லாம் பாடியிருப்பார்கள். ஸ்லோவான பாடலுக்கு முந்தைய காட்சி சேஸிங் காட்சி. பின்னர் டைட்டில் முடிந்ததும், கதை எப்படிப்பட்டது என்பதே சஸ்பென்ஸ் பொடி தூவி சொல்லிக்கொண்டே வருவார்கள்.
‘பூங்காற்று உன் பேர் சொல்ல...’ என்ற பாடல் இன்றைக்கும் மயக்குகிற மெலடி. ‘மாறுகோ மாறுகோ’ எப்போதும் குதூகலப்படுத்துகிற குஷியான பாடல். ‘சீவி சிணுக்கெடுத்து’ பாடலை மலேசியா வாசுதேவன், பிரபுவுக்காகப் பாடியிருப்பார். ’தத்தோம் ததாங்கு தத்தோம்’ என்ற பாடல், டிஸ்கோ ஸ்டைலில் பட்டையைக் கிளப்பியிருக்கும். எஸ்.பி.பி.யும் மலேசியா வாசுதேவனும் பாடிய ‘வானெமன்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு’ பாட்டு மனதை அள்ளும். வருடும்.
1989ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது ‘வெற்றி விழா’. கமலின் ஸ்டைலீஷான படங்களின் வரிசையில், ஆக்ஷன் பட வரிசையில், இன்றைக்கும் ‘வெற்றி விழா’வுக்கு தனி இடமுண்டு.
படம் வெளியாகி, 31 ஆண்டுகளானாலும் ‘வெற்றிவிழா’வையும் ‘மாறுகோ மாறுகோ’வையும் ஜிந்தாவையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT