Published : 25 Oct 2020 07:41 PM
Last Updated : 25 Oct 2020 07:41 PM
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'நவரசா' வெப் சீரிஸை இயக்கவுள்ள 9 இயக்குநர்கள் பட்டியல் முடிவாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகி வரும் இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் தடைப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கரோனா ஊரடங்கில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பணிகளுக்கு இடையே வெப் சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்க திட்டமிட்டு வந்தார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இந்த வெப் சீரிஸில் மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
தற்போது மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன் ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் தான் 9 இயக்குநர்கள் என்பது முடிவாகிவிட்டது.
இதில் ரதீந்திரன் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பை முடித்துவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
விரைவில் இதர இயக்குநர்கள் கதையின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் துல்கர் சல்மானும், பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முதலில் இந்த வெப் சீரிஸை அமேசான் நிறுவனம் வெளியீடாக இருந்தது. தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT