Published : 24 Oct 2020 03:58 PM
Last Updated : 24 Oct 2020 03:58 PM

‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து

சென்னை

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் நேற்று (அக்டோபர் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. 115 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு, முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது. ஒவ்வொரு ஆட்டத்தின் தோல்வியின் போதும், சமூக வலைதளத்தில் சிஎஸ்கே அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சிஎஸ்கே அணியின் ஆட்டம் குறித்து திரையுலக பிரபலங்கள் பகிர்ந்த கருத்துகள் சில:

வரலட்சுமி சரத்குமார்: வாழ்நாள் முழுவதும் சிஎஸ்கேவின் ரசிகை. என்றும் சிஎஸ்கே. ஒரு முறை நடந்துவிட்டது என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர்கள் அணியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் 2 வருடங்கள் ஆடாத போது அவர்களுடன் நின்றோம். இப்போதும் நிற்போம்.

(இந்த ட்வீட்டுடன், இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டிகளில் இதர அணிகள் எத்தனை முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் இருந்துள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்)

அறிவழகன்: தோனி மற்றும் சிஎஸ்கே என்பது உண்மையில் ஒரு உணர்ச்சி. தங்கள் வெற்றிகள் மூலம், ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்று எதிரணிகளுக்கு அச்சத்தைத் தந்ததன் மூலம், 10 வருடங்களுக்கும் மேலாக நமக்குப் பொழுதுபோக்கும் கொண்டாட்டத்தையும் தந்தவர்கள். அது என்றும் நினைவில் இருக்கும். அடுத்த சீஸனுக்குக் காத்திருப்போம். தோனி சொன்னதைப் போல, கேப்டன் எங்கும் ஓட முடியாது

விஷ்ணு விஷால்: எல்லோருக்கும் மோசமான நாட்கள்,மோசமான ஆட்டங்கள், மோசமான தொடர்கள் அமையும். அளவுக்கதிகமாக விமர்சிக்க வேண்டாம். தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். நாம் பல முறை வென்றிருக்கிறோம். தோனி பேசிய வார்த்தைகள் அற்புதம். கடினமான கட்டத்தில் நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் குணத்தைக் காட்டும். கடினமான நேரத்தில் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கட்டும்.

தமன்: உங்களை நாங்கள் நேசிக்கிறோம் தோனி. இந்த ஆட்டத்துக்கும், உங்கள் அணிக்கும் பல உயர்ந்த, சிறப்பான விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நீங்கள் அற்புதமாக மீண்டு வரும்போதெல்லாம் எங்களை ஈர்த்திருக்கிறீர்கள். 12 வருட ஐபிஎல்லில் சென்னை அணிக்கு ஒரே ஒரு மோசமான வருடம் தான்.

'ஆடை' இயக்குநர் ரத்னகுமார்: சிஎஸ்கேவின் ரசிகர்கள் கூட்டம் அவரது தோள்களின் மேல் தான் உருவானது. அவர் இப்போது ஓய்வுபெற மாட்டார் என நம்புகிறேன். அவர் செல்லும் முன்பு, இளைஞர்களுடன் சேர்ந்து, அடுத்த சீஸனில் மீண்டும் கோப்பையை அவர் வெல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x