Published : 24 Oct 2020 12:17 PM
Last Updated : 24 Oct 2020 12:17 PM
இன்று தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வசூல் சாதனையிலும் சரி, ரசிகர்கள் எண்ணிக்கையிலும் சரி நடிகர் விஜய் உச்ச நிலையை அடைந்திருக்கிறார். அவர் திரைப்படங்கள் திரையிடப்படும் அரங்குகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அனைத்து வயதினரும் அவருடைய திரைப்படங்களை விரும்பிக் காண்கின்றனர். எல்லாத் தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களிலும் விஜய்யைப் புகழும் பதிவுகளே உலக அளவில் அதிகமாக ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு 'தளபதி'யின் மாபெரும் ரசிகர் படை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
தீபாவளி சரவெடி
திரைப்பட நட்சத்திர ஏணியில் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் ஆகியோரின் வரிசையில் வைக்கத்தக்க அளவு மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார் விஜய். இந்த நிலையை அவர் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. பல வெற்றிகளால் படிப்படியாக உயரம் தொட்டது போலவே பல தோல்விகளையும் முப்பது ஆண்டுகளை நெருங்கும் அவருடைய திரைவாழ்வில் கண்டிருக்கிறார். சில நேரம் தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்து 'இனி விஜய் அவ்வளவுதான்' என்று எதிரிகளும் வெறுப்பாளர்களும் மனப்பால் குடித்த நேரத்தில் சட்டென்று ஒரு ஆல் கிளாஸ் ஹிட் படம் கொடுத்து மீண்டெழுவார். அப்படி அமைந்த படங்களில் ஒன்றுதான் 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (அக்டோபர் 24) வெளியான 'திருமலை'.
தொடர்ந்து ஒருசில படங்களின் தோல்விக்குப் பிறகு அந்த 2003-ம் ஆண்டின் தீபாவளிப் பண்டிகை அன்று வெளியான விஜய் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடியாகவும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு சுவையான இனிப்புப் பண்டமாகவும் அமைந்தது.
உச்ச நிலையின் தொடக்கப் புள்ளி
பாலா இயக்கத்தில் விக்ரம் - சூர்யா நடித்த 'பிதாமகன்', 'வல்லரசு' என்னும் மாபெரும் வெற்றிப் படத்துக்குப் பிறகு மகராஜன் இயக்கி அஜித் நடித்த 'ஆஞ்சநேயா' ஆகிய படங்களுடன் வெளியானது 'திருமலை'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றி விஜய்யின் திரைவாழ்வில் மீண்டும் ஒரு ஏற்றத்தைக் கொடுத்த வெற்றிப் படம் மட்டுமல்ல. இன்று விஜய் அடைந்திருக்கும் உச்ச நிலைக்குப் பல வகைகளில் தொடக்கப் புள்ளியாக அமைந்த படமும்கூட.
100 படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் விஜய் நடித்ததில்லை. ஆனால், அவருடைய கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் நடித்தார் விஜய். ஆக இயக்கத்தில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் தரமான படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் சிகரத்தின் பாசறையிலிருந்து விஜய்யை வைத்து ஒரு படம் உருவாக்கப்பட்டது என்கிற பெருமையும் 'திருமலை'யால் விளைந்தது.
பலரும் 'கில்லி' படத்தைத் தான் விஜய்யின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாகச் சொல்வார்கள். 'கில்லி' குடும்ப ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைப் போலவே 'கில்லி'க்கு முன் வெளியான 'திருமலை'யும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. உண்மையில் விஜய்யை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தியது 'திருமலை'. அதுவரை காதல் படங்களிலும் அவ்வப்போது ஆக்ஷன் படங்களிலும் நடித்துவந்த விஜய் 'திருமலை'க்குப் பிறகு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார். அதற்குப் பிறகு 2011-ல் வெளியான 'காவலன்', 2012-ல் வெளியான 'நண்பன்' நீங்கலாக மற்ற அனைத்துமே காதல், சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் படங்கள்தாம்.
அதோடு மாஸான அறிமுகக் காட்சி, அறிமுகப் பாடல், பன்ச் வசனங்கள் என விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஒரு கச்சிதமான வடிவம் கொடுத்த திரைப்படம் என்ற வகையிலும் 'திருமலை' முக்கியத்துவம் பெறுகிறது.
சாதா கதை ஸ்பெஷல் திரைக்கதை
புதுப்பேட்டையில் மெக்கானிக் ஷெட் வைத்திருப்பவரான விஜய் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சந்திக்கும் பெண்ணான ஜோதிகாவைக் கண்டதும் காதலிக்கிறார். பெரும் பணக்காரரின் மகளான ஜோதிகா முதலில் மறுத்து பிறகு காதலை ஏற்கிறார். ஆனால், பெண்ணின் தந்தை விஜய்க்கு எதிராக ஒரு பெரும் நிழலுலக் கூட்டத்தின் தலைவனை ஏவிவிடுகிறார். அதை மீறி விஜய் தன் காதலில் வென்று நிழலுலகக் கூட்டத்தின் தலைவனையும் திருத்தும் கதைதான் 'திருமலை'. 'ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல் அதற்கு வரும் வழக்கமான எதிர்ப்பு நாயகன் தன் வீரத்தாலும் விவேகத்தாலும் அந்த எதிர்ப்பை முறியடுத்து காதலில் வெல்வது என்னும் வழக்கமான கதைதான். ஆனால், இப்படி ஒரு கதையை வைத்து திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் வசனங்களிலும் பல வகைகளில் வித்தியாசம் காட்டி புத்துணர்வு கூட்டியிருந்தார் இயக்குநர் ரமணா.
பொறி பறக்கும் ஆக்ஷன்
விஜய்க்கான பன்ச் வசனங்களும் ஆக்ஷன் காட்சிகளும் பொறி பறந்தன. ''நீ இந்த ஊருக்கே மாஸா இருக்கலாம். ஆனா, உயிருக்கு பயப்படாத என் முன்னாடி தூசு'', ''என் தியேட்டர்ல உன் படத்த ஓட்னன்னு வையி, ஸ்க்ரீனு கிழிஞ்சுடும்'' என்பன போன்ற மாஸ் பன்ச் வசனங்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தன. உள்பனியன் தெரிய பட்டன் போடாத சட்டை, சட்டை காலரிலிருந்து சிகரெட்டை எடுத்து ஸ்டைலாகப் பற்ற வைப்பது என விஜய்யின் கெட்டப்பும் உடல்மொழி அம்சங்களும்கூட பக்கா மாஸாக அமைந்திருந்தன.
'தாம் தக்க தீம் தக்க' என்னும் அறிமுகப் படலில் விஜய் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸுக்கு இணையாக நடனமாடி பட்டையைக் கிளப்பியிருந்தார். வித்யாசாகர் இசையில் படத்தின் மற்ற பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'அழகூரில் பூத்தவளே', ஷங்கர் மகாதேவன் பாடிய 'நீயா பேசியது' உள்ளிட்ட காதல் பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தன.
முழுமையான ஜனரஞ்சக படம்
ஆக்ஷன் மாஸ் காட்சிகளைத் தாண்டி விஜய் - ஜோதிகா இடையிலான காதல் காட்சிகளும் புதுமையாக அமைந்திருந்தன. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற 'குஷி' படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் இது. இரண்டு படங்களுமே வெற்றிபெற்றவை என்னும் வகையில் விஜய்-ஜோதிகா இணை கோலிவுட்டின் வெற்றிகரமான திரை இணைகளில் ஒன்றானது.
மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த புதுப்பேட்டை மெக்கானிக் ஷெட் செட்டும் தத்ரூபமாக அமைந்திருந்தது. அந்தப் பகுதியில் வாழும் மக்களின் அந்நியோன்யமான வாழ்க்கை முறையும் அழகாகப் பதிவாகியிருந்தது. தாய், தந்தை இல்லாத விஜய்க்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் உறவுக்காரர்களாக இருப்பதுபோல் திரைக்கதை அமைத்திருந்தது உணர்வுபூர்வமான சென்டிமென்ட் காட்சிகளுக்கும் வழிவகுத்தது. நண்பனின் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கும் நாளன்று மண்டபத்துக்குச் சென்று பெண்ணை அழைத்து வரும் நாயகனான விஜய் எந்தத் தவறும் செய்யாமல் தன் நண்பனின் காதலால் பாதிக்கப்படும் மாப்பிள்ளைக்காக வருந்தும் காட்சி போல் பல வித்தியாசமான ரசிக்கத்தக்க காட்சிகள் திரைக்கதையைச் சுவாரஸ்யமானதாக ஆக்கியிருந்தன.
இப்படியாக விஜய்க்கு முக்கியமான வெற்றிப் படமாகவும் பல வகைகளில் அவருடைய திரைவாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும் ரசிகர்களாலும் மறக்க முடியாத படமாகவும் அமைந்த 'திருமலை' என்றென்றும் தமிழ் சினிமா நேசர்களால் நினைவுகூரப்படும் என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT