Published : 24 Oct 2020 11:52 AM
Last Updated : 24 Oct 2020 11:52 AM
திமுக எம்பியின் கிண்டல் பதிவுக்கு, பார்த்திபன் கடுமையாகச் சாடி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பார்த்திபன், இயக்கி, நடித்து, தயாரித்து வெளியிட்ட படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. படம் முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம் தான் என்ற வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்து இயக்கியிருந்தார் பார்த்திபன். விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று விருதுகள் வென்றது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரையிடப்பட்டது. அப்போது இந்தியன் பனோரமா சார்பில் படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இதனால் பார்த்திபன் பெரும் உற்சாகத்தில் இருந்தார்.
இந்த வெளியீட்டுக்கு திமுக எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பதிவில் "அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல்ல்ல்" என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இது பார்த்திபனை மிகவும் கோபத்துக்கு உள்ளாக்கியது. உடனடியாக திமுக எம்.பி செந்தில் குமாருக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
"‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை - மேலும் படிக்க)
பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு டாக்டர் எஸ். செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜக-வுல ஒரு சீட் பார்சல்” என்று ஸ்வீட்டாக ட்வீட்டியிருக்கிறார். செந்தில் குமார் அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது கமெண்ட் பாக்ஸில் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்த்தரமான கமெண்ட் போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை.
அதலொன்று ‘எம்.பி அண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது. (அதற்கு மன்னிக்கவும்) அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்
திரிச்சு பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் படத்தில் “சீட் குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க, “சீட் குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’ என இன்றுவரை ஜோக்காக்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங் கொஞ்சம் ஸ்டேண்ட் செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை.
மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர, அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதைப் பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!
கடைசியாக வந்த செய்தி: சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதைக் கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க.....தற்சமய"
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT