Published : 20 Oct 2020 10:24 PM
Last Updated : 20 Oct 2020 10:24 PM
நடிப்பின் முகவரி, நடிப்பின் டிக்ஷனரி என்றெல்லாம் புகழப்படுபவர்... போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடன் யார் நடித்தாலும் கவலைப்படாத சிவாஜி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் முதலானோர் நடிக்கும் போது மட்டும் கவனமாக நடிப்பாராம். கொஞ்சம் அசந்தாலும் தடக்கென எக்ஸ்பிரஷன் கொடுத்து அசத்திவிடுவார்களாம். அப்படி சிவாஜியே கவனமாக இருப்பார் என்கிற பட்டியலில் உள்ள இன்னொரு நடிகரும் உண்டு. அவர்... எஸ்.வி.சுப்பையா.
தென்காசிக்கு அருகில் உள்ள செங்கோட்டைதான் சொந்த ஊர். சிறுவயதிலேயே சினிமாவில் ஆர்வம். நடிப்பதில் தீராப்பசி. அப்போதெல்லாம் சினிமாவுக்கான வழி நாடகம்தான். டி.கே.எஸ். நாடக சபாவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அதிலும் பல வேடங்கள் போட்டார்.52ம் ஆண்டு சிவாஜி கணேசன், ‘பராசக்தி’ மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது போலவே, எஸ்.வி.சுப்பையாவும் அதே 52ம் ஆண்டு, திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சின்னச் சின்ன வேடங்கள்தான் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி, தன் திறமையை வெளிக்காட்டினார்.
வீணை எஸ்.பாலசந்தர், பானுமதி நடிப்பில் உருவான ‘ராணி’ படத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். பலராலும் கவனிக்கப்பட்டார். டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ என்ற படத்திலும் அருமையான கதாபாத்திரத்தில் நடித்தார். பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அந்த சமயத்தில்தான் ‘காலம் மாறிப்போச்சு’ எனும் அளவுக்கு வளர்ந்தார்.
ஆமாம்... ‘ரோஜலு மாராயி’ என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி நடிக்க, ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் வெளியானது. இதில் குணச்சித்திர கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் பிறகுதான், உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என்றால் எஸ்.வி.சுப்பையாவின் ஞாபகம்தான் வந்தது, கோடம்பாக்கத்தில்.
’புதுயுகம்’, ‘சுகம் எங்கே?’, ’போர்ட்டர் கந்தன்’ என்று மளமளவென படங்கள் அமைந்தன. அனைத்துமே உணர்ச்சிகரமான கேரக்டர்கள். ‘போர்ட்டர் கந்தன்’ படத்தில் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, தியேட்டரே அழுது கலங்கியது.
சிவாஜியுடன் ‘மங்கையர் திலகம்’ படத்தில் நடித்தார். ‘நானே ராஜா’ படத்தில் நடித்தார். ‘ரம்பையின் காதல்’ படமும் ‘செளபாக்கியவதி’ படமும் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் புகழையும் கொடுத்தன.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ , ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’யில் இவர் நடிப்பைக் கண்டு, இயக்குநர் கண்ணீர் விட்டு ஓடி வந்து அணைத்துக்கொண்டார்களாம்.
‘பாகப்பிரிவினை’யில் டி.எஸ்.பாலையாவின் தம்பியாக, சிவாஜியின் அப்பாவாக ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். தொடர்ந்து சிவாஜியுடன் நடித்து வந்தார். ‘இரும்புத்திரை’ , ‘பெற்ற மனம்’ என்று அற்புதமான கதாபாத்திரங்கள் கிடைத்தன. அனைத்துமே எஸ்.வி.சுப்பையா எனும் பண்பட்ட நடிப்புப் பசிக்கான தீனியாகவே அமைந்தன. ’பாவ மன்னிப்பு’ படமும் கே.சங்கரின் ‘பாத காணிக்கை’ படமும் நல்ல படங்களாகவும் இவரின் நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களாகவும் அமைந்தன. ‘களத்தூர் கண்ணம்மா’விலும் ‘பாத காணிக்கை’யிலும் கமல், சிறுவனாக இவருடன் நடித்திருந்தார்.
பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், வ.உ.சிதம்பரமாக சிவாஜி நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தை மறக்கவே முடியாது. இதில் மகாகவி பாரதியாராக நடித்திருந்தார் எஸ்.வி.சுப்பையா. அதற்கு முன்பும் பின்னரும் பாரதியாராக பலர் நடித்திருந்தாலும் பாரதியார் என்றால் சுப்பையாதான் நினைவுக்கு வருவார்.
ஜெயகாந்தன் கதையில் ஈர்க்கப்பட்டு, சொந்தப் படம் எடுத்தார் எஸ்.வி.சுப்பையா. சிவகுமார் நடித்த இந்தப் படத்தில், சுப்பையா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிவாஜி மூன்று நாட்கள் நடித்துக்கொடுத்தார். அது கெளரவ வேடம்.
கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தில் ஏழை பிராமண கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார். ‘மறந்து போயிடுத்துன்னு சொல்லிருக்காடி’ என்று எம்.என்.ராஜத்திடம் சொல்லும் போது, ஆடியன்ஸ் கதறிவிடுவார்கள். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று பெண்களுக்கு தந்தையாக நடித்திருப்பார்.
எஸ்.வி.சுப்பையா, பாரதியாராகவும் மாறிவிடுவார். அபிராமி பட்டராகவும் ‘ஆதிபராசக்தி’யில் மாறியிருப்பார். உணர்ச்சியை நடிப்பில் மட்டுமின்றி, படப்பிடிப்புத் தளத்திலும் காட்டிவிடுவாராம் சுப்பையா. உடன் நடிக்கும் நடிகைகள் சரியாக வசனம் பேசவில்லை என்றால் பொசுக்கென்று கோபம் வந்துவிடுமாம். பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி என்று கோபத்தில் அடித்துவிடுவாராம். ‘சுப்பையா அண்ணனைத் தெரியும். அவர் அப்படித்தான். குழந்தை மாதிரி’ என்று நடிகைகளும் இயக்குநர்களும் சொல்லி சமாதானமாகிவிடுவார்கள்.
பின்னாளில், ‘இதயக்கனி’ படத்தில் எம்ஜிஆருடன் நடித்தார். ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்ற பாடலின் ஆரம்பத்தில் வரும் தொகையறாவிலும் எம்ஜிஆரைப் புகழ்ந்துமான வசனங்களையும் அமர்க்களமாக நடித்துச் சிறப்பித்திருப்பார். 'கவிக்குயில்’ படத்தில் சிவகுமாருடன் நடித்திருப்பார்.
நடிகர் சிவகுமார், ஆறுவருடங்களுக்கு முன்பு எஸ்.வி.சுப்பையா குறித்து பகிர்ந்துகொண்டார்.
’’ எஸ்.வி.சுப்பையா அண்ணன் - நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர். திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், 'தான்' என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.
பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' - நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார். நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி - என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி.எஸ். காசு வேண்டாம் என்று சிவாஜி மறுத்துவிட்டார். உணர்ச்சி வசப்பட்டவர் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றிக் கடன் கழிப்பேன் என்று பேட்டியளித்தார்.
காடாத்துணியில் தைத்த அரை டிராயருடன் திருப்பதி நடந்தே சென்று ஏழுமலையானிடம் சண்டை போட்டுத் திரும்புவார் .
நடிப்புத்தொழிலை விட்டு கொஞ்ச காலம் ரெட்ஹில்ஸை அடுத்த கரனோடையில் நிலம் வாங்கி கலப்பை பிடித்து உழுது விவசாயம் செய்தார்.திடும் என்று ஒருநாள் மாரடைப்பால் புறப்பட்டுப் போய்விட்டார். சவக்குழிக்குள் சடலத்தை வைத்து மண்ணைத் தள்ளிய போது 'அப்பா மூஞ்சி மேல மண்ணைப் போடாதிங்க. அவருக்கு மூச்சு முட்டும்'- என்று அவரின் 6 வயது மகன் சரவணன் அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது’’ என்று உணர்ச்சி பொங்கிடத் தெரிவித்தார் சிவகுமார்.
எஸ்.வி.எஸ். என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.வி.சுப்பையாவுக்கு இன்று பிறந்தநாள். 1920ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். இன்று அவருக்கு 100வது பிறந்தநாள்.
நூற்றாண்டு காணும் அந்த இறவாக் கலைஞனைப் போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT