Published : 20 Oct 2020 01:36 PM
Last Updated : 20 Oct 2020 01:36 PM
ஓடிடி தளங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து பெரும்பாலான இயக்குநர்கள் தன்னிடம் புகார் அளிப்பதாக ஷேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
‘மசூம்’ (1983), ‘மிஸ்டர் இந்தியா’ (1987), ‘பேண்டிட் குயின்’ (1994) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஷேகர் கபூர். பூலான் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘பேண்டிட் குயின்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘எலிசெபத்’ (1998), ‘எலிசெபத்: தி கோல்டன் ஏஜ்’ (2008) உள்ளிட்ட சர்வதேசப் படங்களை இயக்கியுள்ளார். இவ்விரண்டு திரைப்படங்களும் சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக இயக்குநர் ஷேகர் கபூரை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நியமித்தது.
இந்நிலையில் ஓடிடி தளங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் குறித்துப் பெரும்பாலான இயக்குநர்கள் தன்னிடம் புகாரளிப்பதாக ஷேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் எந்தவித சினிமா அறிவுமின்றி இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தங்களுக்குக் கட்டளையிடுவதாக பெரும்பாலான இயக்குநர்கள் என்னிடம் புகார் அளிப்பதற்காக அழைக்கின்றனர். மேலும், இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளுக்காக ஒரு ‘தயாரிப்பு மற்றும் திரைப்படப் பாடநெறியை’ பரிந்துரைக்க உள்ளேன்''.
இவ்வாறு ஷேகர் கபூர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT