Last Updated : 20 Oct, 2020 10:55 AM

 

Published : 20 Oct 2020 10:55 AM
Last Updated : 20 Oct 2020 10:55 AM

‘டிடிஎல்ஜே’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு:  பெண்களிடம் பேசுவதற்கே வெட்கப்படுபவனாக இருந்தேன்.- மனம் திறக்கும் ஷாரூக் கான்

1995ஆம் ஆண்டு ஷாரூக் கான், கஜோல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’. இப்படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார். வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.

இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25-வது வருடம் நிறைவடைகிறது. ஆதித்யா சோப்ராவின் முதல் படமான இது இந்தியத் திரையுலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் ஒன்று.

இப்படம் தொடர்பான தனது நினைவுகளை நடிகர் ஷாரூக் கான் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘நான் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், ஒரு ஹீரோவாக நடிப்பவருக்கு உண்டான தோற்றம் இல்லாதவனாகவும் இருப்பதாக பலர் என்னிடம் கூறினார்கள். நான் போதுமான அளவு அழகானவனாகவும், அப்போது அவர்கள் கூறிய அந்த ‘சாக்லேட் பாய்’ போல இல்லை என்றும் நான் உணர்ந்தேன். இதனால் எனக்கு காதல் படங்கள் ஒத்துவராது என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி, நான் பெண்களிடம் பேசுவதற்கே வெட்கப்படுபவனாகவும் இருந்தேன். காதல் காட்சிகளில் வரும் வசனங்களை கூட எனக்கு சரியாக பேச தெரியவில்லை.

காதல் படங்களே பிடிக்காத எனக்கு நானும் கஜோலும் சேர்ந்து நடித்த காதல் காட்சிகள் இதமானவையாக இருந்தன என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ராஜ் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு நான் நடித்திருக்கவில்லை. ‘டிடிஎல்ஜே’ திரைப்படத்துக்கு முன்னால் பல்வேறு படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனவே காதல் படங்கள் எனக்கு சரிப்பட்டு வராது என்று நான் நினைக்க இதுவும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆதி மற்றும் யாஷ் இருவரும் இந்த படத்தின் வாய்ப்பை எனக்கு வழங்கிய போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதை நான் சரியாக செய்வேனா என்று தெரியவில்லை.

நான் நானாக நடித்த கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்று என்பதை பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். திரைக்கு பின்னால் என்னிடம் நீங்கள் காணும் சேஷ்டைகள், நடத்தைகளை அப்படத்தில் நீங்கள் பார்க்க முடியும். குறிப்பாக நகைச்சுவை காட்சிகளில்.

இவ்வாறு ஷாரூக் கான் கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் ‘டிடிஎல்ஜே’. மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் இப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x