Published : 18 Oct 2020 12:22 PM
Last Updated : 18 Oct 2020 12:22 PM
’இந்தப் படத்தை எத்தனை தடவைதான் டி.வி.ல போடுவானோ. சேனலை மாத்துங்கப்பா’ என்று சொல்லாத வீடுகளே இல்லை. ’இந்தப் படத்தை எத்தனை தடவை போட்டாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம்’ என்றும் சொல்லாதவர்களே இல்லை. தொலைக்காட்சியில், அந்தப் படத்தை ஒளிபரப்பினால், படம் ஆரம்பித்து முடிகிற வரை, வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். குடும்ப உறுப்பினர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பார்க்க உட்கார்ந்துவிடுவார்கள். படம் முடிந்த பிறகுதான், அடுத்தடுத்த வேலைகளில் இறங்குவார்கள். படம் ஆரம்பித்து முடிகிற வரைக்கும், மொத்த வீடும் வெடித்துச் சிரிக்கும். வீடே குலுங்கி அடங்கும். அன்றைய நாளே மிகப்பெரிய ரிலாக்ஸான நாளாக அமைந்துவிடும். இப்படியான படங்களின் பட்டியலில் இந்தப் படத்துக்கு ராஜ கெளரவம் போட்டு, ‘அண்டர்லைன்’ பண்ணி வைத்திருக்கிறது தமிழ் சினிமா ரசிகக் கூட்டம். அந்தப் படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’.
பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இளையராஜா இசையில், சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியானது ‘மைக்கேல் மதன காமராஜன்’.
ஒரே மாதிரி இன்னொருவர் என்பதை வைத்துக்கொண்டு கதை பண்ணுவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஒரே மாதிரி நான்குபேர் என்றாக்கி அதிலும் புதுசு பண்ணினதுதான் ‘மைக்கேல் மதன காமராஜன்’. ஆள்மாறாட்டம் என்பது, சினிமாவுக்கு அல்வா சாப்பிடுவது போல. இதில் நான்கு அல்வா பாக்கெட்டுகள். இருட்டுக்கடை அல்வா, மஸ்கோத் அல்வா, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா என்று மணக்க மணக்க, காமெடி விருந்து படைத்தார்கள், இதில்!
இந்த ஆள்மாறாட்டம் வித்தியாசமானதுதான். மிகப்பெரிய செல்வந்தர், யாருக்கும் தெரியாத உறவால் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். அண்ணனின் சொத்துகளை அபகரிக்க, குழந்தைகளைக் கொல்ல ஆளனுப்புகிறார். ஆனால் நான்கு குழந்தைகளும் திசைக்கு ஒன்றாகச் செல்கிறது. தன் சொந்தக் குழந்தை என்று தெரியாமல், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். படிக்கவைக்கிறார். தன் வாரிசு என்று அறிவிக்க இருக்கும் நிலையில், அண்ணனைக் கொல்லத் திட்டமிடுகிறார் தம்பி.
அண்ணன் இறந்துவிட அந்த சொத்துகள், என் மகனுக்கு என்றிருக்கும் நிலையில், தத்து மகன் (பெற்ற மகன்) வருகிறார். அவருக்கு ‘உன் அப்பா ஆகிஸிடெண்டில் சாகலை. அதுவொரு கொலை’ என்று மர்ம போன் வருகிறது. அதை யார் செய்தது என்று துப்பறிகிறார். அவர் ஒரு கமல். மதன். அந்த வீட்டின் மேனேஜர் நாகேஷ், 25 லட்சம் கையாடல் செய்திருக்கிறார். பணத்தைக் கொடுக்கச் சொல்லி கமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பாலக்காட்டு சமையல்காரர் டெல்லிகணேஷ். அவரின் மகன் காமேஸ்வரன் இன்னொரு கமல். அப்பாவி. வெகுளி. அசடு. தான் உண்டு, தன் சமையல் உண்டு என்று வாழ்ந்து வருகிறார்.
தீயணைப்பு வீரர் சுப்ரமணிய ராஜூ. இதுவொரு கமல். நாடகம் போட்டு கலையார்வம் தீர்க்க, கடனாளியாகிறவர்.
மதுவுக்கு அடிமையாகி, சந்தோஷமாக இருக்க எந்த தப்புத்தண்டாவும் செய்கிற சந்தான பாரதி. ஒரு குழந்தையைக் கொல்ல மனமில்லாமல், வளர்க்கிறார். மைக்கேல் என்று பெயர் வைத்து, கள்ளநோட்டு, கட்டபஞ்சாயத்து என்று செய்யும் மைக்கேல் மற்றொரு கமல்.
மதன் கமலை ஃபாலோ செய்து வரும் கூட்டம், காமேஸ்வரனைப் பார்த்துவிட்டு பின் தொடர்கிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில், மதனைத் தாக்க வரும் போது, அங்கே சுப்ரமணிய ராஜுவுடன் சண்டை நடக்கும். மதனும் சுப்ரமண்ய ராஜூவும் சந்தித்துக்கொள்ள, ‘எனக்கு பதிலாக என் பங்களாவில் இருந்துகொள்.நான் என் அப்பாவைக் கண்டுபிடிக்கவேண்டும்’ என்று உதவி கேட்கிறார். இங்கே ஆரம்பிக்கிறது முதல் ஆள்மாறாட்டம்.
மதனைத் தீர்த்துக் கட்ட, மைக்கேலிடம் வருகிறார்கள். அங்கே மதனைப் பார்க்கிற மைக்கேல், ‘அவனைப் போலவே இருக்கும் நாம், அங்கே புகுந்து பணத்தைக் கொள்ளையடிப்பது’ என்று தன் குறுந்தாடியை மழித்து மதனாகிறார். இது அடுத்த ஆள்மாறாட்டம்.
நாகேஷின் மகளுக்குக் கல்யாணம். கையாடல் பண்ணின பணப் பிரச்சினை ஒருபக்கம். கல்யாண நாளும் நெருங்குகிறது. அந்த சமயத்தில் காமேஸ்வரன் கமலைப் பார்த்துவிட, அவருக்குப் பணம் கொடுத்து, மதனாக நடிக்க, பங்களாவுக்கு அழைத்துச் செல்கிறார். இதுவொரு ஆள்மாறாட்டம்.
சமையல் கமலுக்கு ஊர்வசி ஜோடி. கூடவே திருட்டுப்பாட்டி எஸ்.என்.லட்சுமி. மதன் கமலுக்கு நாடகம் போடும் மனோரமாவின் மகள் ரூபினி ஜோடி. ஓவியம் வரையும் குஷ்புவுக்கு தீயணைப்பு வீரர் கமல் ஜோடி.
இந்த விஷயங்களை வைத்துக்கொண்டுதான், காமெடி கதகளி ஆடியிருப்பார் கமல். ஒரு சீரியஸ் படம், ஒரு காமெடிப் படம் என்று பண்ணிக்கொண்டிருக்கும் கமலுக்கு, ‘மைக்கேல் மதன காமராஜன்’ மணிமகுடம் என்றுதான் சொல்லவேண்டும்.
கிட்டத்தட்ட நான்கு கமலும் மீசையெல்லாம் மழித்து ஒரேமாதிரியாக இருப்பார்கள். ‘தசாவதாரம்’ கமல் ஒவ்வொரு கெட்டப் என்றால், இங்கே ஒரே மாதிரியாக இருப்பார்கள். ஆனால் பாலக்காட்டு தமிழ், சென்னை பாஷை, வெளிநாட்டு ஆங்கிலம், கரகர கம்மியான குரல் என்பதில் வித்தியாசம் காட்டியிருப்பார் நான்கு பேருக்கும்.
கமல் - ஊர்வசி, கமல் - ரூபினி, கமல் - குஷ்பு. கமல், ஊர்வசியுடன் டெல்லிகணேஷ், எஸ்.என்.லட்சுமி. கமல், ரூபினியுடன் மனோரமா, நாகேஷ். கமல், குஷ்புவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி. இன்னொரு கமலுடன் சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி. ஆக, காட்சிக்குக் காட்சி, கிச்சுக்கிச்சுதான். வெற்றிலைப் பெட்டி, திருட்டுப் பாட்டி, மளிகை சாமான், எலிமருந்து, சாம்பாரில் மீன், ‘நாடோடி மன்னன்’ ஆள்மாறாட்டம், வட்டிக்கு பணம், ரூபினியின் பொய் டெலிபோன், கமலின் ஆஜானுபாகு பீம் (மகாபாரத பீமன்), ஆர்.எஸ். சிவாஜியின் லூசுத்தனம், பொன்னம்பலம் அன் கோ துப்பறிதல், சந்தானபாரதி பொசுக்பொசுக்கென கட்டையால் அடித்துவிடுவது, ‘கேட்ச் மை பாயிண்ட்’, ‘திருப்பு திருப்புன்னான்’ .... என்று சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு காமெடியின் உச்சம் தொட்டிருப்பார்கள், ‘மைக்கேல் மதன காமராஜன்’.
90-ல் கம்ப்யூட்டரே நமக்கு வியப்பு. கமல் காரில் சென்று கொண்டே லேப்டாப்பைத் தட்டுவார். அதற்கு விசில் பாஸ்வேர்டு வைத்திருப்பார். பாலக்காட்டு தமிழில் பேசுவது சினிமாவுக்குப் புதுசு. அதில் பாடலே பாடியிருப்பார் கமல். இரண்டு கமல் நிற்பார்கள். அருகில் உள்ள பீரோவின் கண்ணாடியில் அந்த கமல் தெரிய... ‘எனக்கு நாலு தெரியுது பாஸ்’ என்பார் பீம். படத்தில் நான்கு கமல் என்பதை ஸிம்பாலிக்காக வசனத்தில் சொல்லும் நேர்த்தியும் அந்த தொழில் நுட்பமும் வியக்கவைக்கும்.
கமலின் அப்பாவின் சகோதரர்கள் நிஜமாகவே அண்ணன், தம்பி. கன்னடத்தில் மிகச்சிறந்த நடிகர்கள். அந்த தம்பியின் மகன் நாசர். சந்தானபாரதியும் அவரின் தம்பி ஆர்.எஸ்.சிவாஜியும் நடித்திருப்பார்கள். கமலின் குருமார்களில் ஒருவரும் கே.பி.யின் வலதுகரமுமான அனந்து, ‘குணா’வைப் போலவே இதிலும் ஒரு காட்சிக்கு வருவார். வசனகர்த்தா கிரேஸி மோகன், மளிக்கைக்கடைக்காரராக வருவார். இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், படத்தின் டைட்டில் காட்சியில் வந்து, கோடீஸ்வரர், அவரின் தம்பிகள் சூழ்ச்சி, நான்கு குழந்தைகள் பிறப்பு, ஜெயபாரதி அம்மா என்பதையெல்லாம் ‘கதை கேளு கதை கேளு’ பாட்டில் நடித்துச் சொல்லிவிடுவார். சிங்கீதம் சாமான்ய இயக்குநரில்லை என்பதை மேலும் நீருபித்தது இந்தப் படம்.
பஞ்சு அருணாசலத்தின் கதையும் ‘கதை கேளு’ பாடலும் அவரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத வித்தகர் என மேலும் நீருபித்தன. சென்சார் சர்டிபிகேட் போட்டது தொடங்கி, கடைசியில் கலைடாஸ்கோப்பை சிங்கீதம் சீனிவாச ராவ் தூக்கிக் கொண்டு போகிற வரை, சிரிப்பு சிரிப்பு சிரிப்புதான். படம் விட்டு வீட்டுக்கு வந்தாலும் சிரிப்பு நம்முடன் இருந்துகொண்டே இருக்கும்.
பாட்டி திருடுவார். ஆனால் சின்னச் சின்ன, அல்பத்தனமான திருட்டுதான். பேத்தியை எப்படியாவது நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொடுத்துவிடவேண்டும். நாடகத்தில் நடித்து மகளை வளர்ப்பார் மனோரமா. எப்படியாவது நம் பிழைப்பு போல் இல்லாமல், நல்ல இடத்தில் வசதியுடன் வாக்கப்படவேண்டும் என்றுதான் ஆசை. மகளின் கலையில் நம்பிக்கை உண்டு. ஆனால் காதல் கத்தரிக்காய் என்றெல்லாம் போய்விடக் கூடாது என்று குஷ்புவின் மீது கண்வைத்துக்கொண்டே இருப்பார் அப்பா வெண்ணிற ஆடை மூர்த்தி. நாகேஷுக்கு எட்டுமகள்கள். அவர்களைக் கல்யாணம் செய்துகொடுப்பதற்காககவும் வாழ வைப்பதற்காகவும்தான் கையாடல். தன் சுகத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்தாலும் வளர்ப்பு மகனிடம் வைக்கும் பிரியம் என்று செண்டிமெண்டான விஷயங்களை, போகிற போக்கில் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நியாயம் சேர்த்திருக்கும் விதம் அபார உழைப்பு.
பஞ்சு அருணாசலம் படம் என்றாலே இளையராஜாதானே. ‘கதை கேளு கதை கேளு’, ‘சுந்தரி நீயும்’, ரம்பம் பம்’, ‘சிவராத்திரி’, ‘பேர் வைச்சாலும் வைக்காமப் போனாலும்’ என எல்லாப் பாடல்களும் ஆஹா ஓஹோ ரகம். மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் கெளரி சங்கரின் ஒளிப்பதிவு அமர்க்களம். ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ பாடல் முழுவதையும் ஸ்லோமோஷனில் எடுத்திருப்பார்கள். அதுவரை இப்படி வந்ததில்லை. படத்தின் வசனங்கள் பசுமரத்தாணி. கிரேஸி மோகன் வார்த்தைகளுக்குள் சிரிப்புத் தேன் தடவி எழுதியிருப்பார். படத்தில் நடித்த அத்தனை பேருமே மனதில் பதிந்துவிடுவார்கள். டெல்லிகணேஷ் பிரமாதப்படுத்திவிடுவார். எஸ்.பி.பி.யின் ‘ரம்பம் பம்’ மனோவின் ‘சிவராத்திரி’, கமலின் ‘சுந்தரி நீயும்’, மலேசியா வாசுதேவனின் ‘பேர் வைச்சாலும்’, இளையராஜாவின் ‘கதைகேளு கதை கேளு’ படத்தில் இடம்பெறாமல் கேசட்டுகளில் இருக்கும் மனோவின் ‘ஆடிப்பட்டம் தேடிச் சன்னல்’ என ஒவ்வொருப் பாட்டும் ஒவ்வொரு விதம். க்ளைமாக்ஸ் காட்சியை எப்படிப் படமாக்கினார்கள் என்பதை எத்தனை முறை பார்த்தாலும் யூகித்துவிடவே முடியாது. சிரிப்பதா, கவனிப்பதா என்று ஒவ்வொரு முறையும் நம் கவனத்தையும் காமெடி மறைத்துவிடும். ஊர்வசியின் காமெடி டேக் ஆஃப் தொடங்கியது இங்கிருந்துதான். கமல் தொடர்ந்து எஸ்.என்.லட்சுமி அம்மாவை பயன்படுத்திக் கொண்டே இருந்தார். நாகேஷையும் அப்படித்தான்.
90ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி தீபாவளிக்கு வந்தது ‘மைக்கேல் மதன காமராஜன்’. படம் வெளியாகி, 30 வருடங்களாகின்றன. இன்னும் பலப்பல முப்பதுகள் கடந்தாலும் சிரித்துத் தொடரும் பாரம்பரியமாக மைக்கேலும் மதனும் காமேஸ்வரனும் சுப்ரமண்ய ராஜுவும் இருப்பார்கள். நம்மைச் சிரிக்கவைத்துக்கொண்டே இருப்பார்கள்.
‘மைக்கேல் மதன காமராஜன்’தான். ஆனாலும் இதுவும் கமலின் ‘விஸ்வரூபம்’தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT