Published : 17 Oct 2020 02:47 PM
Last Updated : 17 Oct 2020 02:47 PM
மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபுவின் கருத்துகள் குறித்து, சங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது எனக் கேட்டு நடிகைகள் ரேவதியும், பத்மப்ரியாவும் சங்கத்தின் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
2017-ம் ஆண்டு, நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளானார். நடிகர் திலீப் இந்த வழக்கில் ஒரு குற்றவாளி. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபுவிடம், திரையுலக ஊழியர்களின் நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் அந்த நடிகை இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாபு, அந்த நடிகை சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றும், இறந்தவர்களைத் தங்களால் உயிர்ப்பிக்க முடியாது என்றும் பதில் கூறியுள்ளார். இந்தக் கருத்துகளைக் கண்டித்து கடந்த வாரம், நடிகை பார்வதி நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்தே ரேவதி மற்றும் பத்மப்ரியா ஆகியோர் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. பாபுவின் கருத்துகள் குறித்த சங்கத்தின் நிலைப்பாட்டோடு சேர்த்து, குறிப்பிட்ட நடிகைக்கு எதிராகக் சங்கத்தின் துணைத் தலைவரும் எம்.எல்.ஏவுமான கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ள கருத்து குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர்.
திரைப்பட சங்கத்தோடு ஒட்டுமொத்தத் துறையின் பெயரைக் கெடுக்கும் வண்ணம் செயல்படும் ஒரு சிலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
"மலையாளத் திரைப்பட சங்கத்தின் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பெண்கள். ஆனால் அவர்களைப் பாதுகாக்க, ஆதரிக்க, ஊக்குவிக்க எந்தவித முயற்சிகளும் செய்யப்படாது. ஆனால், அவர்களது பிரச்சினைகளைப் பற்றிப் பொதுவில் கிண்டலடித்து அவர்களைத் தனியாகத் தவிக்கவிட அனைத்து முயற்சிகளும் செய்யப்படுவது போலத் தெரிகிறது. எவ்வளவு மோசமான சிக்கலை நம் அமைப்பு சந்தித்தாலும், ஒட்டுமொத்தத் தலைமையும் அமைதியாகவே இருக்கும்" என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சித்திக்குக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், 2013 பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டத்தின் படி சங்கம் செயல்படுகிறதா என்பது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment