Published : 15 Oct 2020 05:36 PM
Last Updated : 15 Oct 2020 05:36 PM

7ஜி ரெயின்போ காலனி வெளியான நாள்: மனிதனை உருமாற்றி உயர்த்தும் காதலின் கதை 

சென்னை

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காதல் படங்கள் வந்துள்ளன. பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. சில படங்கள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட காவிய அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அப்படி காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றான '7ஜி ரெயின்போ காலனி' வெளியான நாள் இன்று. 2004 அக்டோபர் 15 அன்று அந்தப் படம் வெளியானது. இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் 7ஜி என்றாலே விடலை வயதில் தோன்றும் காதலும் அதற்குப் பிறகு அது முதிர்ச்சியான ஒன்றாக மேம்படுவதும் பிரிவின் வலியும் நினைவுக்கு வரும் அளவுக்கு தலைமுறைகள் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் படம்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய இரண்டாம் படமான '7ஜி ரெயின்போ காலனி' செல்வராகவனை தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக்கியது. முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் விடலைப் பருவக் காதலைத்தான் களமாக எடுத்துக்கொண்டார் என்றாலும் அதைக் கையாண்ட விதம் அதில் வெளிப்பட்ட மனிதர்கள், ஆண்-பெண் உறவு குறித்த கூர்மையான அவதானிப்பு உறவுகளுக்கிடையே நிலவும் முரண்களையும் அவற்றுக்கு ஆழத்தில் வேரூன்றி இருக்கும் அன்பையும் எடுத்துக்காட்டிய விதம் சமூக ஏற்ற தாழ்வுகள் குறித்த நுட்பமான பார்வை என அனைத்தையும் ஒருங்கிணைத்து காத்திரமான படமாகக் கொடுத்திருந்தார் செல்வராகவன்.

வேலைக்குச் செல்லாமல் பெற்றோரை சுரண்டித் தின்னும் இளைஞனான படத்தின் நாயகன் காதலால் பொறுப்புள்ள மனிதனாகிறான். காதலியின் நிரந்தர பிரிவுக்குப் பிறகு வேறு துணையை நாடிச் செல்லாமல் காதலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறான். ஆனால் பழையபடி தீய வழியில் செய்யாமல் காதலின் நினைவுகளோடே பொறுப்புமிக்க அன்றாட வாழ்க்கையைத் தொடர்கிறான். காதலின் மூலமாக ஒரு பொறுப்பில்லாத விடலை பொறுப்பான மனிதனாக உருமாறுவதோடு முழுமையான மனிதனாக உயர்கிறான். முதிர்ச்சியும் அக்கறையும் நிரம்பிய பெண்ணின் துணை அவளுடைய அன்பு, கண்டிப்பு, எல்லாம் ஒருப் பொறுப்பற்ற ஆணை பொறுப்பு மிக்க சமூக மனிதனாக மாற்றுவதையும் மெலோட்ராமா இல்லாமல் பிரச்சார நெடி இல்லாமல் கலையமைதியுடன் பதிவு செய்திருந்தார்.

ஹவுசிங் போர்ட் குடியிருப்புகளில் வாழும் கீழ் நடுத்தர, நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞர்களின் வாழ்வியலை வெகு இயல்பாக பதிவு செய்த படமாகவும் இது இருந்தது. குடியிருப்பில் நடைபெறும் விழா ஒன்றில் இளைஞர் உள்ளே புகுந்து மைக்கை தட்டிப் பறித்து 'ராஜா ராஜாடி ராஜனிந்த ராஜா' என்னும் பாடலை தப்பும் தவறுமாகப் பாடுவது,கிரிக்கெட் விளையாடும்போது நிகழும் சொதப்பல் போன்ற காட்சிகளை எல்லாம் எல்லோராலும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. இவற்றால் எல்லாம்தான் '7ஜி ரெயின்போ காலனி' தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் இரண்டு படங்களில் தன்னுடைய தம்பி தனுஷை நாயகனாக இயக்கிய செல்வராகவன் இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா என்னும் புதுமுக நடிகரை இயக்கினார். கதாபாத்திரத்துக்குத் தேவையான தோற்றமும் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அவரிடமிருந்து கச்சிதமாக வெளிப்பட்டன. 'காதல் கொண்டேன்'-ல் நாயகியாக நடித்த சோனியா அகர்வால் இந்தப் படத்தில் மேலும் சிறப்பாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றிபெற்றவை என்பதோடு சாகாவரம் பெற்றவையாகவும் நிலைத்துவிட்டன.

கே.கே. மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடி ஆண் குரலிலும் பெண் குரலிலும் தனித் தனியாக அமைந்த நிரந்தரக் காதல் பிரிவின் வலி இழையோடு 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்', கார்த்திக் குரலில் காதலியின் நிராகரிப்பின் வலியைச் சொல்லும் 'கண்பேசும் வார்த்தைகள்', ஹரீஷ் ராகவேந்திரா ஸ்ரீமதுமிதா இணைந்து பாடிய 'கனாக் காணும் காலங்கள்' ஆகியவை அந்தக் காலகட்டத்தில் அனைவருடைய பிளேலிஸ்ட்டிலும் இடம்பிடித்தன. படத்தின் எல்லாப் பாடல்களுமே மிகப் பெரிய வெற்றிபெற்றன. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருந்தார். படத்தின் முக்கியமான தருணங்கள் அனைத்துக்கும் தீம் இசை அமைத்திருந்தார். இந்த ஒரு படத்துக்கு மட்டும் 25 தீம் இசைத் துணுக்குகளை உருவாக்கியிருந்தார். மொத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது '7ஜி ரெயின்போ காலனி'.

நாயகனின் தந்தையாக நடித்த விஜயன், நண்பனாக சுமன் ஷெட்டி நாயகியின் தந்தையாக சவிதா பிரபுனே என துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் கவனம் ஈர்த்தார்கள், மகன் வேலைக்குப் போகத் தொடங்கியதை அறிந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவன் முகத்துக்கு நேராக வெளிப்படுத்தாமல் இரவு படுக்கையில் 'அவனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்' என்று மனைவியிடம் சொல்லி ஆனந்தக் கண்ணீர் சிந்தும் காட்சியில் விஜயனின் நடிப்பு அனைவரையும் உறைய வைத்தது. பல குடும்பங்களில் தந்தை-மகனுக்கிடையே நிலவும் உரசல்கள் நிறைந்த உறவுக்குள் ஒளிந்திருக்கும் பாசப்பிணைப்பை பளிச்சென்று காண்பித்த காட்சி அது.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற '7ஜி ரெயின்போ காலனி' விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வங்கம், ஒடியா, கன்னடம். இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்தி மறு ஆக்கமான 'மலால்' கடந்த ஆண்டுதான் வெளியானது.

மொத்தத்தில் வானவில்லைப் போலவே அரிதானது எப்போது யார் பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம் '7ஜி ரெயின்போ காலனி' இன்னும் பல தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x