Published : 13 Oct 2020 12:25 PM
Last Updated : 13 Oct 2020 12:25 PM

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது: மாதவன்

மும்பை

தோனியின் மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டதற்கு மாதவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி தொடக்கத்திலிருந்தே மோசமான தோல்விகளை அடைந்து வருவது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. கடந்த 7-ம் தேதி நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு ரசிகர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். தோனி ஐபிஎல் போட்டிகளில் ஒழுங்காக விளையாடாவிட்டால், தோனியின் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று எல்லை மீறி, ஏற்க முடியாத வகையில் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி சார்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் எண், ஐபி எண் உள்ளிட்ட விவரங்களை குஜராத் போலீஸாருக்கு அனுப்பிய ராஞ்சி போலீஸார் மிரட்டல் விடுத்த அந்த நபரைப் பிடிக்க உதவக் கோரினர். ராஞ்சி போலீஸார் கேட்டுக்கொண்டதையடுத்து, அந்த செல்போன் எண்ணுக்குரிய முகவரியைக் கண்டுபிடித்தபோது, அந்த நபர் 16 வயதுச் சிறுவன் என போலீஸாருக்குத் தெரியவந்தது. அந்தச் சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாதவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"காவல்துறை அற்புதமான செயல்பாடு. இணையத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேசலாம் என்று நினைக்கும் முகமற்ற அரக்கர்களுக்குச் சட்டத்தைப் பற்றிய, கடவுளைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. அவர்கள் பதின்ம வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி."

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்

— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 12, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x