Published : 12 Oct 2020 01:17 PM
Last Updated : 12 Oct 2020 01:17 PM
2021-ம் ஆண்டு 'சூர்யவன்ஷி' படத்தையும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு '83' படத்தையும் வெளியிட ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள், வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் தங்களின் திரைப்படங்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.
பாலிவுட்டில் தயாராகியுள்ள இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களின் வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றிக் கதையைச் சொல்லும் '83', ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. தற்போது இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அணியின் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன், கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யவன்ஷி' இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் போலீஸ் திரைப்பட வரிசையில் வெளியாகும் நான்காவது படம். ஏற்கெனவே அஜய் தேவ்கன் நடித்த 'சிங்கம்' மற்றும் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்', ரன்வீர் சிங் நடித்த 'சிம்பா' ஆகிய திரைப்படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் 'சூர்யவன்ஷி' திரைப்படத்தில், அதே கதாபாத்திரங்களாக, கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக 'சூர்யவன்ஷி' மார்ச் மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டு கரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது. பின் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி அன்று அக்ஷய் குமாரின் 'லட்சுமி பாம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
எனவே, 'சூர்யவன்ஷி' 2021-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து மார்ச் மாதத்துக்குள் ஒரு தேதியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதி பற்றிய இறுதி முடிவு, இயக்குநர் மற்றும் நாயகனுடன் கலந்தாலோசித்தபின் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
'83' மற்றும் 'சூர்யவன்ஷி' ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT