Published : 12 Oct 2020 12:50 PM
Last Updated : 12 Oct 2020 12:50 PM
முத்துராமலிங்கத் தேவரின் பயோபிக் திரைப்படமான 'தேசிய தலைவர்' படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக உருவாகவுள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப் படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
முத்துராமலிங்கத் தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' உள்ளிட்ட படங்களை இயக்கிய அரவிந்தராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ் கூறியதாவது:
''இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கெனவே புகழ்பெற்ற, ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலைத் தர அவரால் மட்டும்தான் முடியும். இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான்.
இந்தப் படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்பட வேண்டும் என்றால் அது இந்தப் படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்குச் சிறப்பான பாடல்களை உருவாக்கித் தருகிறேன்” என உறுதியளித்தார்''.
இவ்வாறு அரவிந்தராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT