Published : 11 Oct 2020 12:21 PM
Last Updated : 11 Oct 2020 12:21 PM
'தளபதி 65' படத்தின் அடுத்தகட்டப் பணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஏ.ஆர்.முருகதாஸின் கதையைக் கேட்டுவிட்டு, ஓகே செய்துவிட்டார் விஜய். ஆனால், அவரது திரைக்கதையில் முதல் பாதியை மட்டுமே கேட்டிருந்தார். இரண்டாம் பாதியைத் தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது.
அதற்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவருமே சந்திக்கவே இல்லை. கரோனா அச்சுறுத்தலால் பணிகள் தாமதமாகவே கதையை இன்னும் மெருகேற்றிக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், கடந்த வாரம் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பின்போது இரண்டாம் பாதி திரைக்கதையைத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், முதல் பாதியில் செய்துள்ள மாற்றங்கள் என ஒட்டுமொத்தமாகப் படம் எப்படியிருக்கும் என்றும் கூறியுள்ளார். அனைத்தையும் கேட்டுவிட்டு விஜய் ஓ.கே. செய்துவிட்டார்.
இதனால் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கியுள்ளது. எப்போது படப்பிடிப்புக்குச் செல்கிறோமோ அப்போது அறிவித்துக் கொள்ளலாம், இப்போதைக்கு எந்த அவசரமும் காட்ட வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
'விஜய் 65' படத்தின் அறிவிப்பு தாமதமானாலும், படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியிருப்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT