Published : 10 Oct 2020 08:45 PM
Last Updated : 10 Oct 2020 08:45 PM

சூரி புகார்; மறைமுகமாகச் சாடிய ஜுவாலா கட்டா

சென்னை

சூரியை மறைமுகமாகச் சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் ஜுவாலா கட்டா.

'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடித்தபோது சூரிக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். அந்தப் படத்துக்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைதான் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியின் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உடனடியாக விஷ்ணு விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இன்று (அக்டோபர் 10) சூரியை மறைமுகமாகச் சாடியும் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

இதனிடையே, விரைவில் விஷ்ணு விஷால் திருமணம் செய்யவுள்ள ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"இந்தச் சமூகம் நியாயமற்றதாகவும், எளிதில் ஒருவரைப் பற்றி தீர்மானிக்கக் கூடிய நிலைக்கும் மாறிவிட்டது. நல்ல குடும்பப் பின்புலத்தோடு, பார்க்கப் பணக்காரர்போல இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும்போது இன்னொருவர் குறிப்பிட்ட தோற்றத்தில் இல்லையென்றால் (பணக்காரராக இல்லையென்றால்) இந்த நபர் பாதிக்கப்பட்டவர்.

அல்லது இன்றைய சமூகம் அப்படிப்பட்டவர்களுக்குப் பரிந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. ஏனென்றால் அவர் பார்ப்பதற்குப் போராடி வந்தவரைப் போலத் தெரிகிறார். தனது போராட்டம் பற்றியே எப்போதும் பேசுகிறார் என்பதால்.

தங்களது போராட்டம் பற்றிப் பேசாதவர்கள், தனது போராட்டம் பற்றி பேசும் நபரைவிடக் குறைவான பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள் எல்லாம் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கென அடிப்படை உரிமைகள் இல்லையா?

ஒருவர் பார்ப்பதற்குக் குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறார் என்பதை வைத்து எப்படி அவரை நம்ப முடியும்? வெள்ளை நிறப் பெண்ணை மணந்தால் குழந்தைகள் வெள்ளையாகப் பிறக்கும் என்று நினைக்கும் சமூகம் இது.

ஆனால், அதே சமூகம்தான் ஒருவர் பார்க்க நன்றாக இருந்தால் முதல் பார்வையிலேயே அவரை வில்லன் என்று தீர்மானிக்கிறது? பார்க்கச் சுமாராக இருக்கும் ஒருவர் சொல்கிறார் என்பதானாலா? இது கபடத்தனம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?".

இவ்வாறு ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x