Published : 08 Oct 2020 06:55 PM
Last Updated : 08 Oct 2020 06:55 PM
’’பாக்யராஜ், என்னிடம் ஆயிரம் கற்றுக்கொண்டிருக்கிறான். அவனிடம் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
’என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையச் சேனல் மூலம் இயக்குநர் பாரதிராஜா வாழ்க்கை அனுபவங்களையும் திரை வாழ்க்கை அனுபவங்களையும் தெரிவித்து வருகிறார்.
‘நிறம் மாறாத பூக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ’மண் வாசனை’ என பல படங்களில், புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். எப்படி இந்த தைரியம் வந்தது? எந்த நம்பிக்கையில் இப்படி புதுமுகங்களைக் கொண்டு படம் எடுத்தீர்கள்? அவர்களும் அதன் பிறகு பெரிய நடிகர்களாக, நடிகைகளாக வந்துவிடுகிறார்கள். எப்படி?’ என்று கேட்கப்பட்டது.
’’ஒருவரை பார்க்கும்போதே தெரிந்துவிடும். ஒரு பூவைப் பார்த்ததும் முகர்கிறோம். அதன் தன்மை தெரிந்துவிடும். அதேபோல் ஒருவரைப் பார்க்கும் போதே தெரிந்துவிடும், அவர் எப்படி நடிப்பார் என்று. சிரிப்பு, அழுகை, ஆத்திரம், கோபம், ஆவேசம் எல்லோருக்கும் வரும். அதை எப்படி பயன்படுத்தி சினிமாவுக்குள் கொண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம்.
எந்தக் கேரக்டர் வேண்டுமானாலும் எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். சாதிக்கலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ’இதுல இன்னார்தான் நடிக்கணும், அதுல அவர்தான் நடிக்கணும்’ என்பதெல்லாம் அந்தக்காலம். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஒரு சரோஜாதேவி... அப்படி இருந்தது ஒருகாலம். மனிதன் இருந்தாலே போதும். மனிதனுக்கு இதயம் இருக்கவேண்டும். உணருகின்ற சக்தி இருக்கவேண்டும். அதை வெளிப்படுத்தக்கூடிய சக்தி இருக்கவேண்டும்.
மூன்றாவது படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணினேன். நான்காவதாக ‘நிறம் மாறாத பூக்கள்’ பண்ணினேன். யாரும் நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள்.
‘கிழக்கே போகும் ரயில்’ பண்ணும் போது பாக்யராஜ் எனக்கு அசிஸ்டெண்ட். யதார்த்த வாழ்க்கையில், கதாநாயகனுக்கான ஒரு மூஞ்சி இருக்கிறதா? கதாநாயகிக்கான மூஞ்சி இருக்கிறதா? எல்லோரும் கதாநாயகன் தான். எனக்கொரு கதை இருக்கிறது. அவனுக்கு ஒரு கதை இருக்கிறது. இவனுக்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் நாம் நாயகன். அதேபோல், அந்தப் பெண்ணுக்கு ஒரு கதை இருக்கிறது. என் அம்மாவுக்கு ஒரு கதை இருக்கிறது. என் அக்கா தங்கைக்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதைகளில் அவர்களில் ஹீரோயின் தானே! இதற்கு எதற்காக புதுமைப்பதுமைகள் மாதிரி ஒரு பெண் வேண்டும் என்று எனக்குள் எண்ணம் இருந்தது.
பாக்யராஜைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இயல்பாகவே அவன் டயலாக் ரைட்டர். அவன் வசனம் சொல்லிக் கொடுக்கும் விதம் நன்றாக இருக்கும். நடிகர் விஜயனும் என்னுடைய அஸிஸ்டெண்ட். அவன் மலையாளி. அவன் ஒரு டைப். ‘கிழக்கே போகும் ரயில்’ சமயத்தில், அவர்களிடம் , ‘டேய்... ராதிகாவை சந்தேகப்பட்டீங்களே. அப்புறம் ஒத்துக்கிட்டீங்கதானே. உங்க ரெண்டு பேரையும் நடிகனாக்குறேண்டா. இந்த நாடு ஒத்துக்குதா இல்லியானு பாருங்க’ என்று சொன்னேன். ஒரு சேலஞ்ச் தான்! அதில்தான் பாக்யராஜை நடிகனாக்கினேன். விஜயனை நடிகனாக்கினேன்.
’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை நான் ஹீரோவாக்கும் போது, பெரும்புள்ளிகள் பலபேர், ‘ஏன் இந்த விஷப்பரிட்சை’ என்று கேட்டார்கள். ‘இது விஷப்பரிட்சையெல்லாம் இல்லை. என் கற்பனையில் தோன்றுகிற வாத்தியார் இப்படித்தான் இருக்கவேண்டும். அதில் நடிப்பதற்கு எவ்வளவோ பேர் வந்துபோகிறார்கள். இவன் தான் சொல்லிக்கொடுக்கிறான். என் வாத்தியார் மாதிரியே இருக்கிறான். ஒரு கண்ணாடி மட்டும் போட்டுவிட்டால், என் வாத்தியார்தான்’ என்று நினைத்தேன்.
பாக்யராஜ் பிரில்லியண்ட்டானவன். க்ளைமாக்ஸ் சீரியஸாக இருக்கும். சீரியஸை சீரியஸாகவே சொல்லக்கூடாது. சீரியஸை, கொஞ்சம் ஹ்யூமர் கலந்து சொல்லவேண்டும். அப்போதுதான் க்ளைமாக்ஸ் எடுபடும். இதை அவனிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். பாக்யராஜ் என்னிடம் இருந்து கற்றுக்கொண்டது ஆயிரம். நான் இதை அவனிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.
‘நிழல்கள்’ க்ளைமாக்ஸ் தோற்றுவிட்டது. ஏன்? சீரியஸ். ’கிழக்கே போகும் ரயில்’ படத்தின் க்ளைமாக்ஸும் சீரியஸ்தான். ஆனாலும் அதனுள்ளே காமெடி வந்துகொண்டே இருக்கும். அதை அவன் நன்றாகவே பண்ணுவான். அவனிடம் அந்த ஆற்றல் உண்டு.’’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT