Published : 08 Oct 2020 11:43 AM
Last Updated : 08 Oct 2020 11:43 AM
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்களை டைட்டில் கார்டில் பதிவிட இயக்குநர் விஜய் ஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தாதா 87'. விஜய் ஸ்ரீ இயக்கியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தற்போது 'பப்ஜி' மற்றும் 'பவுடர்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதனிடையே, மத்திய அரசுக்கும் தணிக்கைக் குழுவினருக்கும் இயக்குநர் விஜய் ஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் ஸ்ரீ இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மத்திய தணிக்கைக் குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன் மது குடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்தப் பதிவும் திரைப்படம் தொடங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா 87” படத்தின் டைட்டில் கார்டில், ''பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றம்'' என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாகப் பதிவிட்டோம்.
தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒரு சில கயவர்களால் பெண் ஒருவர் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்குக் கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.
'தாதா 87' படத்தில் சாருஹாசன் பேசிய, 'பெண்களைத் தொட்டால் கொளுத்துவேன்' என்ற வசனத்தை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது. பெண்களுக்கு ஏற்படும் வன்முறைச் சம்பவங்களுக்குக் கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.
தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும், மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்ற எல்லா கோரிக்கைகளிலும் குரல் கொடுக்கும் தலைவர்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய அரசு, தணிக்கைக் குழுவினர் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26-ல் திரைப்பட "டைட்டில் கார்டில் வெகுஜன மக்கள் மத்தியில் சினிமா மூலமாக விழிப்புணர்வைப் பதிய வைத்தார்கள்.
அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் பதிவிடுங்கள்".
இவ்வாறு விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT