Last Updated : 06 Oct, 2020 11:22 AM

 

Published : 06 Oct 2020 11:22 AM
Last Updated : 06 Oct 2020 11:22 AM

'அந்தாதுன்' வெளியாகி 2 வருடங்கள்: ராதிகா ஆப்தே மகிழ்ச்சி

'அந்தாதுன்' திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி அன்று 'அந்தாதுன்' இந்திப் படம் வெளியானது. விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்த இந்தப் படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. சிறந்த இந்தி மொழித் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

ஆயுஷ்மான் குரானா கண் தெரியாத பியானோ இசைக் கலைஞர் போல நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவரைக் காதலிக்கும் சோஃபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார்.

இந்தப் படம் குறித்துப் பேசியிருக்கும் ராதிகா, " 'அந்தாதுன்' என்றுமே என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கும். ஒத்த சிந்தனையுள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. அவர்கள் என் கலையை மேம்படுத்த எனக்கு ஊக்கம் தருபவர்கள், உதவுபவர்கள்.

ஸ்ரீராம் ராகவன் போன்ற ஒரு இயக்குநர், ஆயுஷ்மான் குரானா போன்ற ஒரு நடிகருடன் பணியாற்றும்போது அது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருக்கிறது. தேசிய விருது வென்று, ரசிகர்களிடம் அதிக அன்பையும், காலத்துக்கும் நீடித்து இருக்கும் தன்மையையும் பெற்ற ஒரு திரைப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

'அந்தாதுன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் நிதின் நாயகனாக நடிக்கிறார். தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x