Published : 01 Oct 2020 03:37 PM
Last Updated : 01 Oct 2020 03:37 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் இயக்குநர் ஷங்கர் இணையின் இரண்டாவது பிரம்மாண்ட வெற்றிப் படம். வட இந்தியாவில் மிக்ப பெரிய வசூல் சாதனை புரிந்த தென்னிந்தியப் படம், ரஜினியை வசீகரன் என்னும் விஞ்ஞானியாகவும் சிட்டி என்னும் இயந்திர மனிதனாகவும் நடிக்க வைத்து இரண்டிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க வைத்த படம் 'எந்திரன்' வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2010 அக்டோபர் 1 அன்று அந்தப் படம் வெளியானது.
2007-ல் வெளியான 'சிவாஜி' படத்தின் மூலம் ரஜினியும் ஷங்கரும் இணைய வேண்டும் என்கிற ரசிகர்களின் நீண்டநாள் கனவு நனவானது. அதன் பிறகு 'எந்திரன்' படத்தில் அவர்கள் இணைந்தார்கள். இரண்டு படங்களும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் 'சிவாஜி'யைவிட 'எந்திரன்' புதிய சாதனைகளைப் படைத்தது.
கதைக்கு ஒரு முன்கதை
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் கமல் ஹாசனை வைத்து ஷங்கர் இயக்குவதாக இருந்த 'ரோபோ' திரைப்படம் கமல், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து முதல் கட்ட ஒளிப்படப்பிடிப்பு (ஃபோட்டோ ஷூட்) வரை சென்று அத்துடன் நின்றுவிட்டது. மனிதனைப் போல் செயல்படும் இயந்திரங்களான ரோபோக்கள் என்னும் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து எழுத்தாளர் சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து 'ரோபோ' என்னும் திரைக்கதையை உருவாக்கியிருந்தார்கள். ஏற்கெனவே கமலுடன் 'இந்தியன்' என்னும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்த ஷங்கர் 'முதல்வன்' இந்தி மறு ஆக்கமான 'நாயக்' படத்துக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து 'ரோபோ'வை இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் 'ரோபோ' படத்தைத் தொடர முடியாமல் போகவே புதுமுக இளைஞர்களை வைத்து 'பாய்ஸ்' படத்தைத் தொடங்கினார் ஷங்கர்.
அதன் பிறகு ரஜினியுடன் 'சிவாஜி' முடித்த பிறகு ஷாருக் கானை வைத்து இந்தியில் 'ரோபோ' படத்தை இயக்கத் திட்டமிட்டார். ஷாருக்கே தயாரிப்பதாக இருந்த அந்தப் படம் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.
கமலுக்கான கதையில் ரஜினி
'சிவாஜி'க்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் கைகோக்கும் வாய்ப்பு கிடைத்தபோது 'ரோபோ' கதையை ரஜினிக்கு ஏற்றபடி மாற்றி எடுக்க முடிவெடுத்தார். மாஸான அறிமுகக் காட்சி, அறிமுகப் பாடல், பஞ்ச் டயலாக், அதிரடி சண்டைக் காட்சிகள்,. தனியான நகைச்சுவை ட்ராக் ரஜினி படங்களுக்கென்ற உருவாகியிருந்த சூத்திரத்தை பல வகைகளில் திரைக்கதையில் ஷங்கர் மீது இருந்த அசாத்திய நம்பிக்கையால் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. தமிழ் தலைப்புகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்த காலம் என்பதால் ரோபோ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான அழகான தமிழ்ச் சொல்லாக இயந்திர மனிதன் என்னும் பொருள் வரும் வகையில் 'எந்திரன்' என்று படத்துக்குத் தலைப்பிடப்பட்டது. முதலில் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஐங்கரன் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் விலகிக்கொள்ளவே அப்போது நேரடி திரைப்படத் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் ஈடுபடத் தொடங்கியிருந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'எந்திரன்' படத்தின் தயாரிக்கும் பொறுப்பையும் வெளியிடும் உரிமையையும் ஏற்றுக்கொண்டது.
உலக அழகியின் மறுவருகை
படத்தின் நாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'படையப்பா' நீலாம்பரி கதாபாத்திரம் தொடங்கி பல ரஜினி படங்களில் ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஒவ்வொரு முறையும் ரஜினி பட அறிவிப்பு வரும்போதெல்லாம் இதில் ஐஸ்வர்யா ராய் நடிப்பாரா என்பதே ஹாட் டாபிக்காக இருக்கும். பத்திரிகைகளிலும் தொடர்ந்து இது குறித்த ஊகங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இறுதியாக இந்த ஊகங்கள் உண்மையானது 'எந்திரன்' படத்தில்தான். அப்போது அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை மணந்து ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டிருந்த ஐஸ்வர்யா ராய் பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'எந்திரன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். பாலிவுட் நடிகர் டேனி டென்ஸோங்பா வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார். ரகுமான் இசையமைக்க ரத்னவேலு ஒளிப்பதிவுக்கும் ஆண்டனி படத்தொகுப்புக்கும் சாபு சிரில் கலை இயக்கத்துக்கும் பொறுப்பேற்றனர். ஸ்ரீநிவாஸ் மோகன் தலைமையிலான குழு விஷுவல் எஃபெக்ட்ஸைக் கையாண்டது.. இவர்கள் ஒவ்வொருவரின் அசாத்திய உழைப்பும் படத்தின் தொழில்நுட்ப தரத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றது. 2008-ல் சுஜாதா மறைந்துவிட்டதை அடுத்து ஷங்கரும் பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் இணைந்து 'எந்திரன்' படத்துக்கு வசனம் எழுதினார்.
ரஜினியின் மெனக்கெடல்
மிகப் பெரிய பொருட்செலவில் படத்தைத் தயாரித்தது சன் பிக்சர்ஸ். வழக்கமாக கமல்தான் படங்களில் தனக்கான கெட்டப்புக்கு மிகவும் மெனக்கெடுவார். மேக்கப்புக்கு பல மணி நேரம் செலவிடுவார். இந்தப் படத்தில் சிட்டி ரோபோ கதாபாத்திரத்துக்கு முதல் முறையாக ரஜினி மேக்கப்புக்கு மிகவும் மெனக்கெட்டார். விஞ்ஞானி வசீகரன் கதாபாத்திரத்துக்குப் படிய வாரிய தலைமுடி குறுந்தாடி, கண்ணாடி என்று வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். சிட்டி ரோபோ, சிட்டி ரோபோ 2.0 என்று இரண்டு வெவ்வேறு கெட்டப்புகளில் அசத்தினார்.
சிட்டி படைத்த இரட்டை விருந்து
படத்தில் ரஜினிக்கென்று மாஸ் அறிமுகக் காட்சி, அறிமுகப் பாடல், பஞ்ச் வசனம் எதுவும் இல்லை. சண்டைக் காட்சிகள்கூட இல்லை. சொல்லப்போனால் வசீகரன் ரஜினி ஒரு இடத்தில் சண்டை போடுவதற்குப் பதிலாகப் பயந்து தப்பித்து ஓடிவருவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் 90-களுக்குப் பிந்தைய ரஜினி படத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயங்கள். ஆனால் இவை இல்லாததற்கு மாற்றாக சிட்டி ரோபோவாக இரண்டு வடிவத்திலும் ரஜினியின் சாகசங்கள் அனைத்து வயதினரையும் ஆர்ப்பரிக்க வைத்தன. முதல் பாதியில் உலகியல் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள முடியாத இயந்திர மனிதனின் சாகசங்களும் சொதப்பல்களும் ரசிகர்கள் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. இரண்டாம் பாதியில் முற்றிலும் தீயவனாக மறு உருவம் எடுத்த சிட்டி ரோபோவின் அராஜகங்கள் ரஜினிக்குள் இருந்த வில்லன் நடிகரின் ருத்ர தாண்டவமாக அமைந்தது. ரஜினி ரசிகர்களும் பொது ரசிகர்களும் இரட்டிப்பு சந்தோஷத்துக்கு ஆளானார்கள். பல நூறு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு சுடுவது, பல ஆயிரம் ரோபாக்களாக மாறி ரோபோக்களின் சாம்ராஜ்யத்தை வைத்து சர்வ நாசம் விளைவிப்பது என பிரம்மாண்ட வில்லத்தன காட்சிகளால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார் ஷங்கர். தன்னை உருவாக்கிய விஞ்ஞானியை எதிர்த்து நின்று அவரையே வஷீ என்று கிண்டலடிப்பது 'மே….; என்று ஆடுபோல் கனைப்பது என சிட்டி ரஜினியின் முத்திரைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களைக் குதூகலப்படுத்தின.
தொழில்நுட்ப சாதனை
ரகுமானின் பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற்றன. ஷங்கர் அவற்றை காட்சிப்படுத்தியிருந்த விதம் பாடல்களை காட்சி விருந்தாகவும் ஆக்கின படத்துக்கான. தீம் மியூசிக், பின்னணி இசை என இசை விருந்து படைத்திருந்தார் ரகுமான். அதோடு வி.எஃப்.எக்ஸ் குழுவின் அபாரமான பணி உள்பட தொழில்நுட்ப ரீதியிலும் 'எந்திரன்' புதிய தர அளவுகோலை நிர்ணயித்தது. பல்லாயிரம் சிட்டி ரோபோக்கள் இணைந்து பாம்பு உட்பட பல்வேறு வடிவங்களை எடுத்துச் செய்யும் சாகசங்கள் அனைத்தும் அதுவரையில் தமிழ் சினிமா கண்டிராத கற்பனை உச்சம். தொழில்நுட்ப அசாத்தியம்.
இந்திய வசூலில் நம்பர் 1
தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'எந்திரன்' இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வசூல் சாதனை புரிந்தது. அந்த ஆண்டில் இந்திய அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்த படமானது. ஷாருக் கானின் 'மை நேம் இஸ் கான்', சல்மான் கானின் 'தபாங்' படங்களின் வசூலை முறியடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே பெருமிதம் தேடித் தந்தது.
விமர்சகர்களின் பாராட்டும் விருதுகளும்
தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல பிரபலமான விமர்சகர்களால் வானளவா புகழப்பட்டது 'எந்திரன்'. அதோடு சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த கலை இயக்கம் (சாபு சிரில்) ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதை வென்றது. தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த இயக்குநர் (ஷங்கர்), சிறந்த ஒளிப்பதிவு (ரத்னவேலு), சிறந்த ஆடை வடிவமைப்பு (மனீஷ் மல்ஹோத்ரா) ஆகிய விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கிளிமஞ்சாரோ' பாடலைப் பாடிய சின்மயிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. இன்னும் பல தனியார் விருது விழாக்களில் பல விருதுகள் 'எந்திரன்' படத்துக்கு வழங்கப்பட்டன.
சாகச கேளிக்கைப் படங்களின் முன்னோடி
வசூல், விமர்சனம், விருது என அனைத்து வகையிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற 'எந்திரன்' விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட சாகச கேளிக்கைப் படங்களுக்கான முன்னோடியாகவும் அமைந்தது. அதற்குப் பிறகு தென்னிந்திய அளவில் இதுபோன்ற பல புதிய முயற்சிகளுக்கு வித்திட்டது. ரஜினியுடன் மூன்றாம் முறையாக இணைந்த ஷங்கர், இணைந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை '2.0' என்ற தலைப்பில் முழுக்க முழுக்க முப்பரிமாணத்தில் (3D) உருவாக்கினார். முழுக்க முழுக்க 3டியில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமிதத்துடன் வெளியான '2.0' அதன் முதல் பாகம் அளவுக்குச் சாதிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT