Published : 30 Sep 2020 05:32 PM
Last Updated : 30 Sep 2020 05:32 PM
என் நடிப்பைப் பற்றிச் சொல்ல நான் ஒரு விளம்பரப் படம் எடுத்தால் போதும் என்று மாதவன் தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிசப்தம்'. கோனா வெங்கட் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
'நிசப்தம்' படத்தை விளம்பரத்தை விளம்பரப்படுத்த மாதவன் பேட்டியளித்துள்ளார். அதில் "சமீபத்திய படங்களின் கதைகள் எதுவுமே உங்களை மையப்படுத்தி இல்லை. இந்தப் படமே அனுஷ்காவின் நிசப்தம் என்றுதான் போட்டிருந்தார்கள். கதையின் நாயகனாக எப்போது உங்களைப் பார்ப்பது?" என்று மாதவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் கூறியதாவது:
"நாயகனை விடக் கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிப்பதோடு அப்படியான படங்களைத்தான் தயாரிக்கிறேன். 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு உதவி செய்யும் கதாபாத்திரம்தான் நான். எப்போது நாயகனாக நடிக்க வேண்டும், எப்போது கூடாது என்பது எனக்குத் தெரியவேண்டும். இதை நான் ஆமிர் கான் போன்ற நடிகர்களிடம் கற்றுக்கொண்டேன்.
படம் ஒழுங்காக வர என்ன கதாபாத்திரம் தேவையோ, அதற்கு ஏற்றாற்போல் மட்டும் நடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, எப்போது தேவையோ அப்போது வரை அமைதியாக இருப்பேன். என் நடிப்பைப் பற்றிச் சொல்ல நான் ஒரு விளம்பரப் படம் எடுத்தால் போதும். எனவே, படத்தில் என் கதாபாத்திரத்தின் அளவு என்ன என்பதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை".
இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT