Published : 30 Sep 2020 03:55 PM
Last Updated : 30 Sep 2020 03:55 PM
’இந்தப் படத்தின் பாடல்கள் இந்த வருடத்திலேயே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களாக அமையும்’ என்று சொல்லுவோம். அந்த வருடம் முடிந்து அடுத்த வருடத்தில் வேறு படங்கள் வரும். அதற்கும் இப்படிச் சொல்லுவோம். ஆனால், எத்தனையோ வருடங்களானாலும் இன்னமும் அந்தப் பாடல்கள், ரசிக மனங்களுக்குள் அதே இடத்தில் அமர்ந்திருக்கின்றன என்றால் இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும். அப்படியான பாடல்களைத்தான் காலம் கடந்து நிற்கும் இசை என்றும் பாடல்கள் என்றும் கொண்டாடுகிறோம். ‘தேன் நிலவு’ படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே தேன் ரகம்தான்!
முதன்முதலாக இயக்குநரின் பக்கம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குநர் ஸ்ரீதர். படமாக்கத்திலும் கதை உருவாக்கத்திலும் அந்தக் கதையைச் சொல்லும் பாணியிலும் வசனங்களிலும் தனிகவனம் ஈர்த்தார் ஸ்ரீதர். 59ம் ஆண்டு முதல் படத்தை இயக்கினார். அது ‘கல்யாணபரிசு’. ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி, தங்கவேலு நடித்தனர். இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் அதற்கு முன்பு பாடிக்கொண்டுதான் இருந்தார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாடிக்கொண்டிருந்தவர், தெலுங்கில் 58ம் ஆண்டில், ‘சோபா’ என்றொரு படத்துக்கு இசையமைத்தார். மிகப்பெரிய ஹிட் படமாகவும் அசத்தலான பாடல்களாகவும் கொண்டாடப்பட்டன. அடுத்த வருடமே ‘கல்யாண பரிசு’ படத்துக்காக தமிழில் முதன் முதலாக இசையமைத்தார். அவர்... ஏ.எம்.ராஜா. எல்லாப் பாட்டுகளும் தனித்துவமாகத் திகழ்ந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
59ல் ‘கல்யாண பரிசு’. 60ல் சிவாஜியை வைத்து ‘விடிவெள்ளி’ படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இதற்கும் ஏ.எம்.ராஜாதான் இசை. அதே வருடத்தில் ‘மீண்ட சொர்க்கம்’ படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இந்தப் படத்துக்கு டி.சலபதிராவ் இசையமைத்தார். பிறகு 61ம் ஆண்டில், ஸ்ரீதர் இயக்கியதுதான் ‘தேன் நிலவு’. இந்தப்படத்துக்கு ஏ.எம்.ராஜாதான் இசை.
ஜெமினி, வைஜெயந்திமாலா, தங்கவேலு, எம்.சரோஜா, நம்பியார், வசந்தி என்றொரு புதுமுகம்... என எல்லோரையும் அழைத்துக்கொண்டு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் முழுக்க முழுக்கப் படமெடுத்தார் ஸ்ரீதர்.
ஒரு சின்னவிஷயத்தையும் நான்கைந்து பேரையும் வைத்துக்கொண்டு படம் பண்ணுவது சுலபமல்ல. அதேசமயம் ஸ்ரீதருக்கு இதெல்லாம் சுலபம்தான். காமெடி, காதல், த்ரில்லிங் என கலந்துகட்டி மக்கள் மனதில் நின்றிருப்பார் ஸ்ரீதர். வின்சென்ட் ஒளிப்பதிவு எப்போதுமே ஸ்ரீதருக்கு பலம். இதிலும்தான்!
ஸ்ரீதரும் கண்ணதாசனும் இணைந்தாலே அங்கே வாழ்வியலைப் போதிக்கும் வரிகள், வரிசைகட்டிக்கொண்டு வந்துவிழும். இதில் உள்ள பாடல்களும் காதலின் மயக்கத்தை, காதலின் உத்வேகத்தை, காதலின் வலியை என்று எல்லாவிதமாகவும் வார்த்துக் கொடுத்திருந்தார் கண்ணதாசன்.
ஏ.எம்.ராஜாவின் இசை... உண்மையிலேயே தேன். ‘பாட்டுப்பாடவா’, ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்’, ’மலரே மலரே தெரியாதா?’ என்று எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘பாட்டுப்பாடவா’ பாடலைக் கேட்டால், நாமும் குதிரையில் அமர்ந்து பயணிப்போம். ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற பாடலைக் கேட்டால், தண்ணீரைக் கிழித்துக்கொண்டு நாமும் பறப்போம். இசை செய்யும் ஜாலம் அது. ஏ.எம்.ராஜாவின் குரலின் வசியம் அப்படி. பேஸ் வாய்ஸை வைத்துக்கொண்டு, நம் உயிரின் புள்ளி தொடும் உயிர்ப்பான குரல் அது.
அன்றைக்கு படம் வெளியான போது, பாடலைக் கேட்பதற்காகவும் காஷ்மீரைப் பார்ப்பதற்காகவும் ரசிகர்கள், திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். பின்னாளில், பாட்டுப்புஸ்தகம் வாங்கி அவர்களே ஏ.எம்.ராஜாவாக மாறினார்கள். ஜெமினி கணேசனாக மாறினார்கள். பிறகு மியூஸிக்கல்ஸ் கடைகள் வந்தபோது, இந்தப் பாட்டையெல்லாம் எழுதிக்கொடுத்து, டேப் கேசட்டையும் கொடுத்து பதிவிட்டு தரச்சொன்னார்கள். பிறகு வந்த காலகட்டம்... சி.டிக்களின் காலம். அதிலும் ராஜாங்கம் பண்ணினார் ஏ.எம்.ராஜா... இதுபோன்ற பாடல்கள் மூலமாக! அந்த அளவுக்கு ‘தேன் நிலவு’ தனிச்சுவைகொண்ட பாடல்களாக அமைந்திருந்தன. ஆனால் என்ன... இந்தப் படம்தான் ஸ்ரீதரும் ஏ.எம்.ராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். இதன் பின்னர் மெல்லிசை மன்னர்களைக் கொண்டு படமெடுத்தார் ஸ்ரீதர்.
இதன் பின்னர், பென்டிரைவ், மெமரி கார்டு என்றெல்லாம் வந்ததும் டெளன் லோடு செய்து செல்போன்களில் வைத்திருப்பதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’யைக் கேட்டு உருகுகிறார்கள். ‘பாட்டுப்பாடவா’ என்று கேட்டுக் கிறங்குகிறார்கள். ‘காலையும் நீயே மாலையும் நீயே’ என்று கேட்டு மெய்ம்மறக்கிறார்கள்.
61ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. படம் வெளியாகி, 59 ஆண்டுகளாகின்றன. ‘தேன் நிலவு’. வாழ்க்கையில் திருமணமாகி ஹனிமூன் செல்வார்கள். இதைத்தான் தேனிலவும் என்போம். வாழ்வில், தேனிலவுக்குச் சென்றவர்கள், வாழ்நாள் முழுக்க தேனிலவை மறக்கவே மாட்டார்கள். ஸ்ரீதர் இயக்கத்தில், ஜெமினி, வைஜெயந்தி மாலா, தங்கவேலு, நம்பியார் நடித்த, ஏ.எம்.ராஜாவின் இசையிலும் குரலிலும் பாடல்களைக் கொண்ட ‘தேன் நிலவு’ படத்தையும் எவரும் மறக்கவே மாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment