Last Updated : 29 Sep, 2020 08:25 PM

 

Published : 29 Sep 2020 08:25 PM
Last Updated : 29 Sep 2020 08:25 PM

ஒரேயொரு பாடும்நிலா! 

ஓவியம் : இளங்கோ

நமக்கும் இன்னொருவருக்கும் இணையற்ற பந்தம் ஏற்பட, நான்குநிமிடம் போதுமானது. அந்த நான்கு நிமிடத்தில் கேட்கப்படுகிற குரல், நம்மைக் கட்டிப்போட்டுவிடும். காதலாக்கிவிடும். கண்ணீருடன் கசிந்துருக வைத்துவிடும். எல்லா துக்கத்தையும் மறக்கடித்துவிடும். காதலுக்கும் நட்புக்கும் தூதாகும். உறவுக்கும் வாழ்க்கைக்கும் உத்வேகம் கொடுக்கும். அந்தக் குரல்... அப்படித்தான் நம் செவி வழி புகுந்து, சிந்தைக்குள் போய் பதிந்துவிட்டது. தேன் குரல் என்று சொல்லலாம். அமுது என்று புகழலாம். பலா என்று போற்றலாம். ஆனால் அந்தக் குரலுக்கு நாம் வைத்த பெயர்... நிலா. பாடும் நிலா. பாடும் நிலா எஸ்.பி.பி.

நான்கு நான்கு நிமிடங்களாகப் பாடிய அவரின் பாடல்கள்தான் இத்தனை ஆண்டுகளாக நமக்கும் எஸ்.பி.பி.க்குமான பந்தத்தைக் கொடுத்திருக்கிறது. டீக்கடைகளிலும், ரிக்கார்டுகளிலும் டிடிகே 60 கேசட்டுகளிலும் கல்யாண வீடுகளிலும் விவித பாரதியிலும் இப்போது நம் செல்போனிலும் என அவரின் பாடல்களை... அந்த ஜாலக்குரலை... குலோப்ஜாமூன் குரலைக் கேட்டுக்கேட்டுத்தான் வளர்ந்தோம். அதனால்தான் அவருக்கு அப்படியொரு அஞ்சலியைச் செலுத்த ஓடிவந்தார்கள் ரசிகர்கள்.

‘இயற்கை எனும் இளையகன்னி’ என்ற பாடலின் மூலமாக பரிச்சயமானவர். ‘ஏங்குகிறாள் துணையை எண்ணி’ என்று ‘ஏங்குகிறாள்’ பாடும்போது ஏக்கத்தின் அடர்த்தியை உச்சரிப்பிலேயே உணர்த்திய ஐஸ்க்ரீம் குரலுக்கு உரியவர்... இன்று நம்மையெல்லாம் ஏங்கவைத்துவிட்டார். அவருடைய பாடலின் வழியே, குரலின் வழியே எஸ்.பி.பி.யை உறவாக்கிக் கொண்டோம். அவர் முகத்தை மனதில் இருத்திக்கொண்டோம். அவர் வாழும்போது, அவர் குரல் வழியே பார்த்தோம். மறைந்ததும் அவர் முகம் பார்க்க எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள் ரசிகர்கள். அது பாட்டுத்தலைவன் மீதான அன்பு. பாட்டுக்குயில் குரலெனும் மயிலிறகால் மனதை நீவிவிட்டதற்கான நன்றியின் வெளிப்பாடு.

ஐம்பது வருடங்களாக அவர் குரல் நம்முடன் ஒட்டி உறவாடியிருக்கிறது. 45 ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். பதினைந்து மொழிகளை தன் குரலால் வசீகரத்திருக்கிறார். அத்தனை மொழிகளிலும் அங்கே உள்ள அத்தனை நடிகர்களுக்கும் பொருந்துகிற குரலும் உச்சரிப்பும் பாவங்களும் எஸ்.பி.பி.க்கு இறைவன் கொடுத்த வரம். நமகெல்லாம் எஸ்.பி.பியே வரம்.

ஏற்ற இறக்கங்கள் என்பதெல்லாம் பாலுவின் பாடல்களுக்குள் இருந்தன. அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில், தனி ஆளுமையாக, மகா சக்கரவர்த்தியாகவே திகழ்ந்தார். இந்தியாவில் பாட்டு பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இருக்கலாம். ஆனால் பாலுவின் குரலில் லயிக்காதவர்கள் என்று எவரையும் சொல்லிவிடமுடியாது.
எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், இளையராஜா எனத் தொடங்கி இன்றைக்கு இருக்கும் அநிருத் வரைக்கும் தலைமுறை வித்தியாசங்களின்றி குரலால் ராஜாங்கம் பண்ணியவர் எஸ்.பி.பி. ஜெமினி, எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல், ரஜினி, விஜயகுமார், ஜெய்கணேஷ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், மோகன் என்று எவருக்குப் பாடினாலும் அந்தக் குரல் அப்படியே பொருந்துகிற வித்தையும் விந்தையும் எஸ்.பி.பி.யின் மேஜிக்!

45 ஆயிரம் பாடல்கள்... தெலுங்கில் கமலுக்கும் ரஜினிக்கும் தமிழில் பலருக்கும் டப்பிங் வாய்ஸ்... தெலுங்கு ‘கிழக்கே போகும் ரயில்’ உட்பட தமிழில் ‘சிகரம்’, ‘துடிக்கும் கரங்கள்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்... ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கேளடி கண்மணி’, குணா’, ‘காதலன்’ என பல படங்களின் நடிகர்... என் பன்முகங்கள் கொண்ட பாடும் நிலா பாலுவுக்கு ஒரே முகம்தான். அது... அன்புமுகம். எதிரிகளே இல்லாத பண்புமுகம். எல்லோரையும் நேசிக்கிற, மனதாரப் பாராட்டுகிற பாசாங்கற்ற முகம்.

அந்த முகத்தை கடைசியாகப் பார்த்துவிடவேண்டுமே என்று கண்ணீருடன் வந்தது ரசிகக்கூட்டம். வீட்டில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம் அந்த தாமரை முகத்தைப் பார்க்க நின்றது. கைதட்டி காதாரக் கேட்ட ரசிகவெள்ளம்... கால்கடுக்க கண் கசிய நின்றது.

இந்தியாவில் இவர் கால் படாத, குரல் எதிரொலிக்காத ஒலிப்பதிவுக் கூடங்களே இல்லை. அந்த ஒலிப்பதிவுக்கூடமெல்லாம் அந்தக் கூடத்தின் கருவிகளெல்லாம் எஸ்.பி.பி.யின் குரலைப் பதிவு செய்யக் காத்துக்கொண்டே இருக்கும். கண்ணீர் விட்டு மெளன அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கும்.

முதல்வரில் தொடங்கி ஜனாதிபதி, பிரதமர்... இந்தியாவின் பல மாநில அரசாங்கங்கள் அஞ்சலி தெரிவிக்கின்றன. எல்லா மாநில நடிகர்களும் கலைஞர்களும் கண்ணீருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். கட்சி பேதமில்லாமல் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி, 72 குண்டுகள் முழங்க, காவல்துறை அந்த மகா கலைஞனுக்கு இறுதி மரியாதை செய்திருக்கிறது. இந்த மரியாதை, லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயக்கோயிலில் குடிகொண்டிருக்கும் குரலோனுக்கு ராஜ சல்யூட்! ரசிக சமுத்திரத்துக்கு நடுவே அந்த சங்கீத நிலா, பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தின் உயர்ந்த விருது என்ன? அத்தனை மாநிலங்களின் விருதுகளையும் பெற்றிருக்கிறது அந்தக் குரல். தேசிய விருதுகளையும் பத்ம விருதுகளையும் பெற்றிருக்கிறது அந்தக் குரல். பட்டங்களையும் கிரீடங்களையும் கொண்டிருக்கிறது அந்தக் குரல்.

எஸ்.பி.பி... ‘ஆயிரம் நிலவே வா’ என்று பாடினார். ‘இளைய நிலா பொழிகிறதே’ என்றார். ‘வானம் கீழே வந்தாலென்ன’ என்றார். ‘வண்ணம் கொண்ட வெந்நிலவே வானம் விட்டு வாராயோ’ என்றார். ’வான் நிலா நிலா அல்ல’ என்றார். ‘பாடும் நிலாவே’ என்று பாடினார். ‘நிலவு தூங்கும் நேரம்’ என்றார். ’நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ என்று பாடினார். இப்படி வானத்தையும் மேகத்தையும் நிலவையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய பாடும் நிலா... சங்கீத மேகம் தொடச் சென்றுவிட்டார். வானம் விட்டு வாராயோ என்றவர் வானத்தைத் தொட்டுவிட்டார். நீலவான ஓடையில்... நீந்தச் சென்றுவிட்டது பாடும் நிலா.

எஸ்.பி.பி.யின் சரீரம் பயணத்தை முடித்துக்கொண்டிருக்கலாம். அவரின் சாரீரத்துக்கு முடிவே இல்லை. டீக்கடைகளில், கல்யாண வீடுகளில், ரேடியோக்களில், இணையதளங்களில், செல்போன்களில், முக்கியமாக நம் உதடுகளில் உலா வந்துகொண்டே இருக்கும்... ‘பாடும் நிலா’!

ஒரே வானம்... ஒரே பூமி... ஒரேயொரு பாடும்நிலா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x