Published : 29 Sep 2020 04:45 PM
Last Updated : 29 Sep 2020 04:45 PM
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த புகாரின் மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கிறதா என்கிற கோணத்தில் நடந்து வரும் விசாரணையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தான் புகை பிடிக்காத, எந்தத் தீய பழக்கங்களும் இல்லாத நபர் என ரகுல் ப்ரீத் சிங் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர் சம்பந்தப்பட்ட தினத்திலிருந்தே ஊடகங்களில் பலவிதமான செய்திகளுடன் வர ஆரம்பித்தன. தன்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்திப் பேசுவதை, தனக்கெதிராக எழுதுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு எதிராக ரகுல் ப்ரீத் சிங் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இந்திய பிரஸ் கவுன்சில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது இதன் நிலை என்ன என்று பதிலளிக்க அக்டோபர் 15 வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
காணொலி மூலமாக நடந்து வரும் இந்த விசாரணையில், ரகுல் ப்ரீத் சிங்கின் வழக்கறிஞர் அமான், அறிவுறுத்தப்பட்ட எந்த அமைப்புகளுமே தங்கள் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
"வழக்கு விசாரணை நடக்கும்போது அது பற்றிய செய்திகளைத் தடுக்க உயர் நீதிமன்றத்துக்குப் போதிய அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் நான் சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளேன். நான் போதை மருந்து வைத்திருப்பதாகவும், எடுத்துக் கொள்வதாகவும் பொய்யான செய்திகள் பரவுகின்றன. எனக்குப் புகைப் பழக்கமோ வேறு எந்த தீய பழக்கங்களோ இல்லை" என்று ரகுல் ப்ரீத் சிங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல செய்தி சேனல்கள் தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை. உண்மையான தகவல்களின் அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்பானதா என்பது குறித்தே இந்தப் பிரச்சினை. எனவே, இதற்கு அந்தந்த சேனல்கள் பதில் சொல்ல வேண்டும் என செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரகுல் ப்ரீத் சிங்கின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT