Published : 29 Sep 2020 03:48 PM
Last Updated : 29 Sep 2020 03:48 PM
தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்தில் திறமையான நடிகை என்று ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிட்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
காஷ்மீரில் பிறந்தவரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருடைய தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கல்வியை முடித்தார். சட்டத்தில் பட்டம் பெற்றார். பல்வேறு நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அதோடு நாடகங்களில் நடித்துவந்தார்.
2015-ல் வெளியான வெளியான 'கோஹினூர்' என்னும் மலையாளப் படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் அடுத்த ஆண்டு 'லூசியா' படத்தின் மூலம் புதிய அலை கன்னட சினிமாவைத் தொடங்கிவைத்த பவன்குமார் இயக்கத்தில் 'யூ டர்ன்' என்னும் கன்னடப் படத்தில் நாயகியாக நடித்தார்.
பெங்களூருவில் ஒரு மேம்பாலத்தில் நடைபெறும் தொடர் விபத்து மரணங்களின் பின்னால் இருக்கும் மர்மத்தை ஆராயும் பத்திரிகையாளராக முதன்மைக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். வசூல் ரீதியில் வெற்றிபெற்றதோடு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'யு டர்ன்' படத்தின் மூலம் ஷ்ரத்தா, சிறந்த நடிகைக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
2017-ல் மணி ரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் இதுவே ஷ்ரத்தாவின் முதல் தமிழ்ப் படம். அதே ஆண்டில் 'இவன் தந்திரன்' படத்தில் கெளதம் கார்த்திக் இணையாக நாயகியாக நடித்தார். 'விக்ரம் வேதா' படத்தில் காவல்துறை அதிகாரியான மாதவனின் மனைவியாக சுயசார்பும் சிந்தனையும் கொண்ட வழக்கறிஞராக நடித்தார். மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற இந்தப் படத்தின் மூலம் தமிழில் நம்பிக்கைக்குரிய நடிகையானார்.
கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி மொழிகளில் தடம் பதித்தார். 'ஜெர்சி' என்னும் தெலுங்கு படத்தில் நாயகனின் மனைவியாக முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 'மிலன் டாக்கீஸ்' என்னும் இந்திப் படத்தில் நாயகியாக நடித்தார்.
அதேபோல் தமிழில் 'கே-13' என்னும் புதுமையான த்ரில்லர் படத்தில் அருள்நிதியுடன் முதன்மைக் கதாபாத்திரத்தில் எழுத்தாளராக நடித்தார். இந்தியில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னிடம் பாலியல் அத்துமீறல் நிகழ்த்திய ஆடவனைத் தாக்கியதால் விளையும் பிரச்சினைகளைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் நவீன சிந்தனை கொண்ட பெண்ணாக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
குறிப்பாக நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பால் மோசமாக அவதூறு செய்யப்படும்போது அமைதியாகப் பொறுத்துக்கொள்வது, தர்மசங்கடத்தை வெளிப்படுத்துவது இறுதியில் உடைந்து அழுவது. தன் தரப்பு நியாயத்தைத் துணிச்சலாகப் பேசுவது என அனைத்து வகையிலும் அந்தக் கதாபாத்திரத்துடன் ரசிகர்களை முழுமையாக ஒன்றவைத்துப் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்தியில் தப்ஸி நடித்திருந்த இந்தக் கதாபாத்திரத்துக்குத் தமிழில் ஷ்ரத்தா பொருத்தமான தேர்வுதான் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து தாய்மொழியான கன்னடத்தில் பல படங்களில் நடித்துவரும் ஷ்ரத்தா தமிழில் விஷாலுடன் 'சக்ரா' என்னும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெற்றிபெற்று விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'சார்லி' படத்தின் மறு ஆக்கத்தில் மாதவனுடன் நடித்திருக்கிறார். 'மாறா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இவ்விரு படங்களும் ஒரு நடிகராக ஷ்ரத்தாவின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.
நல்ல கதையம்சமுள்ள படங்களிலும் துணிச்சலான சவால் மிக்க கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொடர்ந்து இதேபோல் நடித்துப் பல விருதுகளை வென்று சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று அவரை மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT