Published : 29 Sep 2020 10:50 AM
Last Updated : 29 Sep 2020 10:50 AM
அனுராக் காஷ்யப்பை கைது செய்யவில்லையென்றால் தனது கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாயல் கோஷ் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அனுராக் காஷ்யப் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலேவை நேற்று நேரில் சந்தித்து அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மும்பை காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ராம்தாஸ் அத்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாயல் கோஷின் புகாரின் பேரில் மும்பை காவல்துறை விரைவாக அனுராக் காஷ்யப்பை கைது செய்யவேண்டும், இல்லையென்றால், எங்கள் கட்சியின் சாரிபில் போராட்டம் நடத்தப்படும். விரைவில் இந்த விவகாரம் குறித்து அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT