Published : 27 Sep 2020 08:46 PM
Last Updated : 27 Sep 2020 08:46 PM

எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: சரண் காட்டம்

கோப்புப் படம்.

சென்னை

இணையத்தில் வைரலாகி வரும் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி சரண் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டது என்றும் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பின்பு எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள்.

இந்தச் செய்தி இணையத்தில் பெரும் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இதை திடீரென்றுதான் பதிவு செய்கிறேன். இந்தப் பதிவு செய்ய சரியான தளம் இதுதானா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைப் பேசுவது இப்போது அவசியமாகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை குறித்தும் என் அப்பாவுக்கான சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது. சில விஷயங்களை மொத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அப்பா மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், பேசித் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தைத் தருகிறது.

இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்படியான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்தவே மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்பிபி மன்னிப்பார். நான் இந்த நபரை மன்னிக்கிறேன். ஆனால், இவர் சற்று முதிர்ச்சியடையவேண்டும். ஒழுங்காக யோசிக்க வேண்டும். சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும்.

ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார். என்ன சிகிச்சை, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் தெரியாது. யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று கூடத் தெரியாது. நான் இப்போது எதையும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம்.

இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. ஒருவரின் செயல் எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது என்பது வருத்தமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நடந்து வரும் விஷயங்களால் ஏற்பட்டிருக்கும் மனவலிக்கு நடுவில் பத்திரிகையாளர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, பேசுவதெல்லாம் எவ்வளவு அசந்தர்ப்பமானது என்பது அவருக்குத் தெரியவில்லை.

இணையத்தில் எளிதாக ஒரு விஷயத்தைப் பதிவேற்றிவிட்டு மற்றவர்களின் வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது சுலபம். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றுதான் நான் சொல்வேன். எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது.

மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனையின் தலைவர் எனக்குத் தினமும் பிரார்த்தனைகள் அனுப்புவார். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள். அனைவருமே சிறந்தவர்கள். இந்த வதந்திகளைப் பரப்பும் நபர்களும் சிறப்பானவர்களாக ஆகலாம். அன்பைப் பின்பற்ற முயலுங்கள். நன்றி".

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x